இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
எங்களுடைய கம்பராமாயண கூட்டு வாசிப்பு சென்ற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 11 2026 அன்று நிறைவடைந்தது. இன்று அக்டோபர் 18 காலை ஜூம் செயலி வாயிலாக யுத்த காண்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை நண்பர்கள் வாசித்தார்கள். ஒவ்வொருவரும் காப்பியமாந்தர்களின் மனநிலையை அவ்வாறே கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்பது சற்றும் மிகையான கூற்றல்ல. இது ஓர் ஐந்தாண்டுத் தவம். எழுத்தாளர் பார்கவி,, நண்பர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் குன்றாத ஊக்க விசை இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நண்பர்கள் இணைந்திருந்தார்கள். நண்பர்கள் சிலருக்கு நள்ளிறவு என்றாலும் சிறிதும் அயர்வின்றி வாசிப்பில் பங்கேற்றார்கள். ஒரு பெருங்கனவின் நிறைவுத் தருணம்! அடுத்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி நாங்கள் நண்பர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் ஒரு நேர் சந்திப்பிற்கு ஒருங்கு செய்திருக்கிறோம்.
காப்பிய வாசிப்பு காலகட்டம் தொடர்பாக எத்தனையோ நினைவுகள். கம்பராமாயணத்தை ஒலிநாடாக்களில் குரல் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மாவை முதன் முதலில் கேட்டுக் கொண்டேன். அம்மாவும் சில பாடல்களை பதிவு செய்து கொடுத்தார். பத்தாயிரம் பாடல்களுக்கு எத்தனை ஒலி நாடாக்கள் தேவைப்படும் என்று அப்போது கற்பனை செய்திருக்கவில்லை. பூவண்ணன் அவர்கள் எழுதிய உரையுடன் கூடிய வர்த்தமானன் பதிப்பக கம்பராமாயண நூல்களை அப்பா வாங்கிக் கொடுத்தார். இம்பர் வாரியில் இணைந்த போது அம்மா கம்ப ராமாயண பாடல்களை என்னுடன் இணைந்து மௌனமாகக் கேட்டு அனுபவித்த நினைவுகள் அவ்வாறே எஞ்சியுள்ளன. இந்த வாசிப்பின் பகுதியாக நாங்கள் அவ்வப்போது சில உரைகளையும் திட்டமிட்டு நிகழ்த்தினோம். இந்த உரைகள் தொடர்பான வெவ்வேறு நினைவுகளில் மனம் ததும்புகிறது.
இந்தப் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட காரணமாக இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் எல்லோரையும் வணங்கும் நிமிடம் இது! . விஷ்ணுபுரம் விழாவிற்குச் செல்லும்போது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் இணைந்து நாங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒரு குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்வோம். நான் இளங்கலை மாணவனாக இருந்தபோது வீடனன் அடைக்கலப் படலத்தையும் முதுகலை மாணவனாக இருந்தபோது கும்பகர்ணன் வதைப் படலத்தையும் பேராசிரியர் கு. அரசேந்திரன் ஐயா அவர்கள் பாடம் நடத்தினார்கள். கம்பர் மீது எனக்கு ஈடுபாடு தோன்றுவதற்கு ஆசிரியரே காரணம். ஆசிரியரை வணங்குகிறேன்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!
Comments
Post a Comment