, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று.  ‌ காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.  
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன. 
 ‌ பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. 
மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிறழ்வின் எல்லைக்கே சென்று விடுகிறார் பைரப்பா. தம்பி கிருஷ்ணமூர்த்தியை நன்கு படிக்க வைக்க வேண்டும், தன்னைப் போல் தம்பி உணவிற்காக வீடு தோறும் அலைந்து அல்லலுறக் கூடாது என்று பைரப்பா கனவு கண்டு கொண்டிருக்க அவரை வந்து சேர்கின்றது கிருஷ்ணமூர்த்தியின் சாவுச் செய்தி. தம்பியின் பிணத்தை தானே தன் தோளில் போட்டுக்கொண்டு சுடுகாட்டுக்குப் போய் கரடி என்னும் தலித் வழிகாட்ட எரித்து விட்டு வருகிறார் பைரப்பா. ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு போவதற்குக்கூட நான்கு பேர் வேண்டும், நாலு பேர் கூட பைரப்பா பிறந்த சந்தேஸ்வரா கிராமத்தில் அவருக்கு  இல்லை.   ஊதுபத்தி விற்பவர், சர்பத் விற்பவர், சமையல்காரர், ஹோட்டல் பணியாளர், திரையரங்கில் இரவு நேர வாயிற் காவலர், ரயில் நிலையத்தில் சுமை தூக்குபவர் என  எத்தனையோ வேலைகள் சிறுவன் வைரப்பாவால் மேற்கொள்ளப்படுகின்றன. சாப்பாட்டிற்காக பிச்சை எடுக்கிறார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டில் என்று கிழமைச் சோறு சாப்பிடுகிறார்.  இத்தனை துயரங்களுக்கு நடுவிலும் எப்படியாவது படித்து விட வேண்டும் என்னும் பைரப்பாவின் சங்கல்பம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. லா.  சா. ரா படைத்துக்காட்டும் உலகமும் வைரப்பாவின் உலகமும் முற்றிலும் நேர்மாறானது.. லா‌ சா‌ ரா. எழுதியது பாற்கடல் என்றால் பைரப்பா காட்டுவது குடும்பம் என்னும் விஷக்கடல் பற்றி. ஒரே ஒரு எடுத்துக்காட்டு. ஹை ஸ்கூலுக்கு பணம் கட்ட சந்தையில் சர்பத் விற்று இந்தப் பையன்  120 ரூபாய் சேர்த்து வைத்திருக்க அதனை இவன் அப்பாவே திருடிக் கொண்டு செல்கிறார். ஏதேதோ வேலை செய்து ஒரு ஐம்பது ரூபாய்  சேர்த்து வந்து வீட்டில் வைத்திருக்க அதனை செத்துப்போன அம்மாவுக்காக வருட திவசம் என்று சொல்லி செலவழிக்க வைத்து விடுகிறாள் பாட்டி. அவளுக்கு மருமகள் மீது அன்பெல்லாம் கிடையாது. வருட திவச நாளன்று   செய்யும் பலகாரங்களையும் பட்சணங்களையும் ஊசிப் போனாலும் பரவாயில்லை என்று வைத்துக்கொண்டு பத்து நாட்கள் வயிறு நிரப்பலாம் ‌ இதுதான் பாட்டியின் எண்ணம்., இப்படித்தான் இருக்கிறது பைரப்பாவின் குடும்பம்.  வறுமையும் சிறுமையும் இருட்டும் மட்டுமே கவிந்திருக்கும் குடும்பத்தை. சந்தேஸ்வரா  கிராமத்தைப்  படைத்துக் காட்டுகிறார் பைரப்பா.  மைசூர் யுவராஜா கல்லூரியில் தத்துவப் பாடத்தில் இளங்கலைப் பிரிவில் மிக மிக புத்திசாலியான  எஸ் எல் பைரப்பா  என்னும் மாணவன் சேரும் இனிய தருணத்தை விளக்குவதாக சுயசரிதையின் முதல் தொகுதி நிறைவடைகிறது ‌.  
சுமார் 600 பக்கங்களில் ஒரே நூலாகத்தான் எஸ் எல் பைரப்பாவின் பித்தி என்னும் சுயசரிதை வெளிவந்திருக்கிறது என்றாலும் பார்வையற்றவர்கள் கேட்பதற்கு வசதியாக இந்த நூல் இரு தொகுதிகளாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள மித்ர ஜோதி என்னும் தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. திரு கே எம் நித்யானந்தா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப இந்த நூலை வாசித்திருக்கிறார்கள். நவம்பர் 7 2025 வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஐந்து மணிக்கு நூலின் முதல் தொகுதியை கேட்க ஆரம்பித்தேன். நவம்பர் 8 . 2025 சனிக்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் நூலின் முதல் தொகுதியை கேட்டு முடித்தேன். இவ்வாறு நான் தொடர்ந்து கேட்டதற்கு பைரப்பாவின் மொழியும் நித்தியானந்தாவின் குரலும் காரணங்கள் . பைரப்பாவின் எழுத்தில் நிறைந்திருக்கும் உண்மையும் அவற்றை சிறப்பாக உள்வாங்கி பிரதிபலிக்கும் திரு. கே எம். நித்தியானந்தா அவர்களின் உணர்ச்சியும் என்னுடைய மனதை வேறு எந்த ப்பணியும் செய்யவிடாமல் புத்தகத்துடன் மட்டுமே இருக்குமாறு  செய்து விட்டன, என்றால் அது மிகையல்ல!
எதெல்லாம் ஒரு குழந்தைக்கு நடக்கக் கூடாதோ அதெல்லாம் 
 எஸ் எல் பைரப்பாவின் வாழ்வில் நடைபெற்றிருக்கிறது. 
 ஆனால் அந்த துயரத்தை சுமார்  25 நாவல்களாக அவர் எழுதியிருப்பதென்பது இலக்கியத்தின் நல்லூழ்,   இவற்றை வாசிக்க அமைந்தது நம்முடைய நல்லூழ்! . 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நேற்று கிடைத்த அரு மணி