நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்
இலக்கியம் என்னவெல்லாம் கொடுக்கும், ஓர் உடம்பில் இருந்து கொண்டு ஓர் ஆயிரம் வாழ்க்கையை வாழும் வாய்ப்பை! அப்புறம் சில இனிய நினைவுகளை எப்போதும் நிறைவளிக்கும் உறவுகளை இவ்வாறு இலக்கியம் கொடுப்பவை அநேகம். .
நண்பர் சாகுல் ஹமீதிடம் அப்துல் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பரமக்குடியில் மேலை முஸ்லிம் ஹைராப்த்துல் அலியா நடுநிலைப் பள்ளியில் 1988 89 ஆம் கல்வியாண்டில் வகாபும் நானும் ஆறாம் வகுப்பு படித்தோம். பார்வையற்ற மாணவன் என்பதால் என்னை வகுப்பில் முதல் வரிசையில் முதலில் உட்கார வைத்திருப்பார்கள். என்னுடன் வகாப் உட்கார்ந்திருப்பான். தாமஸ் யூரிக் காதரின் என்னும் மற்றொரு பையன் எங்களுடன் இருப்பான். முகமது அபுபக்கர், காத்தய்யா. மும்தாஜ் டீச்சர் வீட்டிற்கு எங்கள் அட்டையில் ரேஷன் வாங்கிக் கொண்டு போவேன். பணத்தை எண்ணி எண்ணி என் சட்டையில் வைத்துவிட்டு அது எங்கும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குண்டூசியையும் டீச்சர் குத்தி விடுவார். ரிக்க்ஷாகாரர் வராத நாட்களில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பொறுப்பை வகாப் ஏற்றுக் கொள்வான்
இஸ்லாமியப் பள்ளி என்பதால் எங்கள் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை. . இராமாயணத் தொலைக்காட்சி தொடர் அந்தக் காலத்தில் ரொம்ப பிரபலம். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் வகுப்பறைகள் காலியாகவே கிடக்கும். வகாபை போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டும் தான் ஒழுங்காக பள்ளிக்கு வருவார்கள்.
பள்ளியிலிருந்து எங்கள் வீட்டிற்கு வர இரண்டு பாதைகள். சாலை வழியாக வரலாம். வைகை வழியாக வந்தும் வீட்டிற்கு அருகில் கரையேறிவிடலாம். வருடத்தில் மூன்று நாட்கள் முதல் 10 நாட்கள் வரை எங்கள் வைகையில் தண்ணீர் ஓடினால் அதிகம். ராமு மணலில் கால் புதைய புதைய ஆற்றின் வழியாக கூட்டிக் கொண்டு வருவான் . வகாபு நோட்டுகளை பார்த்துத் தான் விட்டுப் போன பாடங்களை அம்மா எனக்கு எழுதிக் கொடுப்பாள். எங்கள் வீட்டு பண்டிகைகளில் வகாப் உடனிருப்பது நிச்சயம். அவன் உடன் இருப்பின் எங்கள் வீட்டு தெய்வங்களுக்கு சில புதிய பெயர்களும் கிடைக்கும். விநாயகருக்கு அவன் வைத்த பெயர் உக்கி போடும் சாமி. உண்மையில் உக்கி போடப் போவது நாமா சாமியா என்று மதுரைக்குப் போய் அவனை நேரில் பார்க்கும் போது கேட்க வேண்டும். .
பரமக்குடியிலிருந்து சென்னை வந்த நாட்களில் எனக்கு அவனிடமிருந்து கடிதங்களும் வருவதுண்டு. பிறகு கடைத்தெரு கூட்டத்தில் தனித்தனியே போய்விட்டோம்.
விஷ்ணுபுரம் விழாவை ஒட்டிய சந்திப்பு ஒன்றில் நண்பர் சாகுலிடம் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன் இவனைப் பார்க்காமல் இந்த களஞ்சியம் நிறைவதில்லை என்று
. பிறகு அதனை மறந்தே விட்டேன்.
இன்று காலை பரமக்குடியில் இருந்து இலியாஸ் என்பவர் கூப்பிட்டு வகாப், அபூபக்கர் இருவருடைய எண்களையும் கொடுத்துவிட்டார்.. கத்தாரில் இருந்து சாகுல் தம்பியும் தேடியிருக்கிறார்.
பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். மதுரையில் நூல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான். அபுபக்கர் தேனீர் கடை நடத்துகிறான்.
நாமாக எடுக்கக் கூடாது. யாருக்கு
முறுக்கு வேண்டும் என்றாலும் அம்மாவை தான்
கூப்பிட வேண்டும். என்ன சரிதானே வகாப்.
Comments
Post a Comment