நேற்று கிடைத்த அரு மணி
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை. குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம் வாசகி பற்றி ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது? அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது. காவியம் நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்ப...