இந்திய எழிற்கலை நூல் அறிமுகம்
சென்னைப் பல்கலைக்கழக பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக தத்துவத்துறை சார்பில் இந்திய எழிற்கலை என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தத்துவத் துறைக்கு டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி மையம் என்று பெயர். பேராசிரியர் பெ திருஞானசம்பந்தன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஐந்து உரைகளின் எழுத்து வடிவம் இந்த நூல். இந்தியக் கவிதையியல் குறித்து தமிழில் நூல்கள் இல்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது இந்த நூல் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது. நூலாசிரியருக்கு தருமபுர ஆதீனம் மும்மொழிக் கொண்டல் என்ற விருதை வழங்கியுள்ளது. நூலில் இடம் பெற்றிருக்கும் ஆங்கிலம், தமிழ் வடமொழி மேற்கோள்களிலிருந்து இத்தகைய ஒரு விருதுக்கு இவர் தகுதியுடையவர் என்றுதான் தோன்றுகிறது. நூலின் தொடக்கப்பகுதி கலையும்எழிலும் என்பதாகும். ஐந்து உரைகளுள் முதலாவது என்பதால் கலை பற்றிய பொதுவான அறிமுகமாக இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம். நடை,,குணம் முதலிய கவிதைக் கொள்கைகள் பற்றி இரண்டாவது இயல் விரிவாக விளக்குகிறது. சுவைக் கொள்கை பற்...