இந்திய எழிற்கலை நூல் அறிமுகம்

சென்னைப் பல்கலைக்கழக பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக  தத்துவத்துறை சார்பில் இந்திய எழிற்கலை என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தத்துவத் துறைக்கு டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி  மையம் என்று  பெயர். 
பேராசிரியர் பெ திருஞானசம்பந்தன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஐந்து  உரைகளின்  எழுத்து  வடிவம் இந்த நூல். இந்தியக் கவிதையியல் குறித்து தமிழில் நூல்கள் இல்லை  என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது இந்த நூல் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது.  
நூலாசிரியருக்கு தருமபுர ஆதீனம் மும்மொழிக் கொண்டல் என்ற விருதை வழங்கியுள்ளது. நூலில் இடம் பெற்றிருக்கும் ஆங்கிலம், தமிழ் வடமொழி மேற்கோள்களிலிருந்து இத்தகைய ஒரு விருதுக்கு இவர் தகுதியுடையவர் என்றுதான்  தோன்றுகிறது. 
நூலின் தொடக்கப்பகுதி கலையும்எழிலும் என்பதாகும்.   ஐந்து உரைகளுள் முதலாவது என்பதால் கலை பற்றிய பொதுவான அறிமுகமாக இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம். 
நடை,,குணம் முதலிய கவிதைக் கொள்கைகள் பற்றி இரண்டாவது இயல் விரிவாக விளக்குகிறது. சுவைக் கொள்கை பற்றியும்  ரசம் எனப்படும் சுவை தோன்ற காரணங்கள், சுவையின் விளைவுகள் பிற்காலத்தில் பக்தி என்ற உணர்வு ரசமாகக்  கருதப்பட்டு  சுவைக்கொள்கை  மறு வரையறைக்கு உட்பட்ட வரலாறு இவை குறித்தெல்லாம் இந்த நூலின் மூலம் அறியலாம்.   த்வனி எனப்படும் குறிப்புக் கொள்கை இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  கருத்துக்கள்  குறிப்பாக  எவ்வாறு புலப்படுத்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் கவிதையை உத்தமோத்தமம், அதாவது சிறந்ததில் சிறந்தது, உத்தமம்  என்றெல்லாம் வகைப்படுத்துவது  சுவாரசியமாக உள்ளது. த்வனி எனப்படும் குறிப்புக் கொள்கை குறித்து விரிவாக அறிய விரும்புபவர்கள் இந்த நூலை ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம். 
ஔசித்ய எனப்படும் பொருத்தப் பாட்டுக்  கொள்கை குறிப்புக் கொள்கை அளவிற்கு விரிவாக விளக்கப்படவில்லை என்றாலும் ஓர் தொடக்க நிலை அறிமுகமாக சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. 
வடமொழி இலக்கண அறிஞர்கள் த்வனி எனப்படும் குறிப்புப் பொருள் பற்றி  எத்தகைய கருத்துகளை முன் வைத்தார்கள்? அதிலும் குறிப்பாக ஒரு சொல் எந்த அடிப்படையில் பொருளை உணர்த்துகிறது என்று கருதுகிறார்கள்  இவை  குறித்தெல்லாம் அறிய விரும்புபவர்கள் ஒரு முறை நூலை வாசிக்கலாம். ஆனால் கருத்துகள் அவ்வளவு எளிதில் புரிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.  வடமொழி   இலக்கண மரபுகள் குறித்து ஓரளவு அடிப்படை அறிவுடைய ஆர்வலர்களுக்கு சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவு பற்றி விளக்கும் நூலின்  ஐந்தாவது 
 கட்டுரை புரியக்கூடும்.   
ஆறாவது கட்டுரை  சுவைக்கும் பிற கலைகளுக்கும் இடையே உள்ள உறவு குறித்து மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. . 
தொல்காப்பியம்,  கலித்தொகை, சிலப்பதிகாரம்  முதலியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகள் நூலில் வழங்கப்பட்டுள்ளன. 
நூலை வாசிக்கும்போது தமிழ் இலக்கண மரபில் பேராசிரியருக்கு நல்ல பயிற்சி இருப்பது தெரிகிறது. இந்த புலமையும் பயிற்சியும் வடமொழி கலைச் சொற்களை தமிழ்ப்  படுத்துவதில்  அவருக்கு உதவியிருந்தால் இந்தியக்  கவிதையியலை  தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கம் இன்னும்  சிறப்பாக நிறைவேறியிருக்கும்  என்று தோன்றுகிறது. அந்த அளவு வடமொழிச் சொற்கள் நூலில் விரவியுள்ளன. 
மொத்தத்தில் இந்தியக் கவிதையியல்  குறித்த ஒரு தொடக்க நிலை அறிமுகத்துக்கு உதவும் ஒரு நூலாக பெ. திருஞானசம்பந்தன் எழுதிய இந்திய  எழிற்கலை என்ற நூல் திகழ்கிறது. 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்