அந்தக் கரம் அந்த மனம்
ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும் போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால் ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.
பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்
பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.
எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை
. மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது அம்மாவின் பார்வையிலிருந்து
தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.
பட்டாசு ஒலிகள் செவியில் விழும் இந்த மாலைப் பொழுதில் ஓர் நிகழ்வை பகிர்ந்து கொண்டாக வேண்டும். மற்ற குழந்தைகளைப் போல என்னால் பட்டாசு வெடிக்க முடியாது என்பதை என் மனம் புரிந்து கொள்ளவில்லை. தீபாவளி அன்று அழுது அடம் பிடித்தேன். மற்றவர்கள் பரிதாபப்பட்டார்கள், சிலர் எரிச்சலும் அடைந்ததுண்டு
அவள் அம்மா அல்லவா, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டாள்.
பட்டாசு பற்ற வைத்துவிட்டு என்னை கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு வேகமாக வருவதில் ஆபத்து இருக்கிறது என்று நினைத்திருக்க வேண்டும்.
துணியை உலர்த்தவும் ஒட்டடை அடிக்கவும் பயன்படும் ஒரு பெரிய தடியை எடுத்துக் கொண்டாள். அதன் நுனியில் பட்டாசு கொளுத்தும் ஊதுபத்தியைக் கட்டினாள். பரமக்குடியில் எங்கள் வீட்டில் இருக்கும் நான்கு ஒற்றைத் திண்ணைகளில் ஒன்றில் பட்டாசு வைத்துவிட்டு வந்தாள். சற்று தள்ளியிருக்கும் எதிர்த் திண்ணையில் என்னை உட்கார வைத்துக்கொண்டு என் கையில் அந்த நீண்ட தடியை கொடுத்து பிடித்துக் கொள்ளச் செய்தாள். என் கையைப் பிடித்து பட்டாசு கொளுத்த வைத்தாள் அம்மா. என் வாழ்வில் ஏற்பட்ட எத்தனையோ சிக்கல்களுக்கு இவ்வாறு நூதனமான தீர்வுகளை அவள் முன் வைத்த துண்டு.
ஒரு பார்வையற்ற குழந்தை அம்மாவின் அருகமைவில் பட்டாசு வெடித்ததுச் சிரித்தது.
அது ஒரு தீபாவளி!
நான் இதை எழுதுவேன் என்று அறிந்திருக்காத அடுத்தடுத்த தீபாவளிகளில் உடனிருந்தாள் அம்மா.
வீற்றிருந்தாள் அன்னை வீதியில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்!
(பட்டிணத்தார்)
Comments
Post a Comment