நான் வாங்கிய முதல் குட்டு!
பெயர் பொருத்தம் பற்றி எல்லாம் எனக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளை பார்த்தால் ஏதாவது அப்படி இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. பரமக்குடி ஆயிர வைசியத் தொடக்கப் பள்ளியில் என்னைச் சேர்த்திருந்தார்கள்.முருகேசன் சார் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவருடைய மனைவி கோமதி டீச்சர் எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர். என்னுடைய அம்மா எனக்கு வீட்டிலேயே தமிழ் எழுத்துகளை எழுதச் சொல்லிக் கொடுத்திருந்தார். ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்று இறங்கியவுடன் நான் ஸ்லேட்டுப் பலகையில் நேரடியாக அம்மா என்று எழுதிக் காட்டியதும் கோமதி டீச்சர் பரவாயில்லை என்று சொன்னதும் அப்படியே நினைவில் இன்னும் இருக்கிறது. என்னைப் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டவர் நாங்கள் குடியிருந்த மேலச்சத்திரம் தெரு ஸ்டோர் வீட்டில் எங்களுடன் வசித்த திருமிகு ராமசாமி அவர்கள். நாங்கள் அவரை வாத்தியார் மாமா என்று ஆசையாகக் கூப்பிடுவோம். செல்லம்மாள் டீச்சர் என்று இன்னொரு டீச்சரும் எங்கள் ஸ்டோர் வீட்டில் குடியிருந்தார். ஒரு பெரிய வீடு அதில் பல குடும்பங்கள் சில அறைகளை பங்கிட்டுக்கொண்டு வசிப...