நான் வாங்கிய முதல் குட்டு!

பெயர் பொருத்தம் பற்றி எல்லாம் எனக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளை பார்த்தால் ஏதாவது அப்படி இருக்குமோ என்று தான் தோன்றுகிறது.  
பரமக்குடி ஆயிர வைசியத் தொடக்கப் பள்ளியில் என்னைச்  சேர்த்திருந்தார்கள்.முருகேசன் சார்  பள்ளியின் தலைமை ஆசிரியர். அவருடைய மனைவி கோமதி டீச்சர் எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர். 
என்னுடைய அம்மா எனக்கு வீட்டிலேயே  தமிழ் எழுத்துகளை எழுதச்  சொல்லிக் கொடுத்திருந்தார். ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்று இறங்கியவுடன் நான் ஸ்லேட்டுப்  பலகையில் நேரடியாக அம்மா என்று எழுதிக் காட்டியதும் கோமதி டீச்சர் பரவாயில்லை என்று சொன்னதும் அப்படியே நினைவில் இன்னும் இருக்கிறது.
என்னைப் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டவர் நாங்கள் குடியிருந்த மேலச்சத்திரம் தெரு ஸ்டோர் வீட்டில் எங்களுடன் வசித்த திருமிகு  ராமசாமி அவர்கள். நாங்கள் அவரை வாத்தியார் மாமா என்று ஆசையாகக் கூப்பிடுவோம். செல்லம்மாள் டீச்சர் என்று இன்னொரு டீச்சரும் எங்கள் ஸ்டோர் வீட்டில் குடியிருந்தார். ஒரு பெரிய வீடு அதில் பல குடும்பங்கள் சில அறைகளை பங்கிட்டுக்கொண்டு வசிப்பார்கள். வீட்டுக்கு பொதுவாக ஒரே வாசல்தான்.   கழிப்பறை கிணறு எல்லாம் உண்டு.  எல்லாம் பொதுப் பயன்பாடு. இதுதான் ஸ்டோர் வீடு. 
சரி , சொல்ல வந்த விஷயத்தில் இருந்து நினைவுகளால் இழுக்கப்பட்டு கொஞ்சம் விலகிச்  சென்று விட்டேன்.  
முருகேசன் சார் கோமதி டீச்சர் இவர்களின் மகள் ஜோதி டீச்சர். ஜோதி டீச்சரின் ஒரு சகோதரியும் பள்ளியில் வேலை செய்ததாக அறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெயர் நினைவில்லை. ஜோதி டீச்சர் பரமக்குடி போன்ற ஒரு பின் தங்கிய ஊரில் நவீனத்தின் கனவாக வாழ்ந்தவர் என்று தோன்றுகிறது. தான் ஏற்றுக் கொண்ட பணியில் அவ்வளவு ஈடுபாடு டீச்சருக்கு இருந்தது. மூன்றாம் வகுப்பில் சேர்ந்த எங்களை நவ நாகரிகத்துக்கு உட்படுத்தும் மாபெரும் வரலாற்றுப் பணியை டீச்சர் ஏற்றுக்கொண்டிருந்தார். முதலில் எங்களுக்கு வரிசை என்றால் என்ன என்றே தெரியாது. என் வகுப்பில் படிப்பவர்கள் மணி அடித்தால் தீப்பிடித்த இடத்திலிருந்து தப்பிச்செல்லும் மனிதர்கள் போல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே ஓடுவார்கள். டீச்சர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை ஒழுங்கு படுத்தினார். வகுப்புக்குள் வரும்போது வெளியில் நின்று அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும் என்ற விஷயத்தை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது ஜோதி டீச்சர் தான். 
தண்ணீர் குடிக்க வேண்டும், சிறுநீர் கழிக்க வேண்டும் இவற்றையெல்லாம் உரிய கை அசைவுகளில் தெரிவிக்க முடியும் என்று கற்றுக் கொடுத்தவர் டீச்சர். 
டீச்சருக்கு அப்போது கல்யாணம் ஆகி இருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. டீச்சர் கொஞ்சம் குள்ளம் எப்போதாவது பிள்ளைகளை அடிக்க வேண்டும் என்றால் அவருக்கு கை எட்டாது. அப்போது அடி வாங்கும் பையனை மற்றவர்கள் பின்னாலிருந்து தள்ளி விட வேண்டும்.டீச்சர் அந்தப் பையனைக் கையால் பிடித்துக் கொண்டு அப்புறம் அடிப்பார்.போர்டை பார்க்க முடியாது என்பதால்  என்னை முதல் வரிசையில் உட்கார வைத்திருப்பார்கள். அடி வாங்குபவர்களை டீச்சரிடம் தள்ளிவிடும் பாக்கியம் எனக்கும் எப்போதாவது கிடைக்கும்,  அடுத்தவர்களைத்  தள்ளிவிட எனக்கு  ரொம்பப் பிடிக்கும். 
முத்துகிருஷ்ணன் என்ற பையன் புத்தகத்தில் யானையின் சாணத்தை  வைத்திருந்தான். அப்படி பாடப்புத்தகத்தில் யானை சாணம்  வைத்திருந்தால் நன்றாகப் படிப்பு வரும் என்று அவனிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள்.  முத்துகிருஷ்ணன் தற்செயலாக புத்தகத்தைத் திறக்க,  அது என்ன என்று டீச்சர் கேட்க முத்துகிருஷ்ணன் கொஞ்சம் கூட தயங்காமல் யானை பீ என்று சொல்ல வகுப்பு சத்தம் போட்டு சிரித்தது. ஆனால் தனது மாணவன் இன்னொரு யுகத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான் என்பதில் டீச்சருக்குத்தான்  கொஞ்சம் மனத்தாங்கல். 
எங்களுக்கு மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கில மொழி அறிமுகமானது. Bat, Rat, Cat, Mat என்பதுதான் முதல் பாடம். 
மொத்தம் ஐந்து வார்த்தைகள். டீச்சர் வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளை கடைசி பிரியடில் டிக்டேஷன் கொடுப்பார். வகுப்பில் ஒரு மாணவனின் முதுகுக்கு நேராக இன்னொரு மாணவனின் முதுகு இருக்கும்படி நிற்க வைத்து டீச்சர் டிக்டேஷன் கொடுப்பார். பார்த்து எழுதிவிடக் கூடாது இல்லையா? அதற்காகத்தான். 
 நான் மட்டும்தான் ஐந்துக்கு ஐந்து மதிப்பெண்கள் வாங்குவேன். கண் பார்வை இல்லாத நான் ஆங்கில மொழியை நன்றாக எழுதுவதில் டீச்சருக்கு கொள்ளை சந்தோஷம். என்னைப் பற்றி எல்லோரிடமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெருமையுடன் சொல்ல டீச்சர் தவறியதே கிடையாது. 
சில வாரங்கள் கழித்து 24 வார்த்தைகள் உள்ள மூன்றாவது பாடம் டிக்டேஷன் கொடுத்த போது நான் 24 வார்த்தைகளையும் பிழையில்லாமல் எழுதி விட்டேன். டீச்சர் என்னைப் பற்றி பாராட்டிச்  சொன்ன வார்த்தைகளை நான் அதன் பொருள் அறியாமலேயே அம்மாவிடம் வந்து சொன்னேன். அம்மா அதை அப்பாவிடம் போய் சொல்லும்படி சொன்னார். அப்பா மெல்லிய மனநிலையில் இருக்கும் அதிகாலை வேளையில் நான் டீச்சர் சொன்னதை அப்பாவிடம் அப்படியே சொன்னேன். அப்பா டீச்சர் உன்னைப் பற்றி அப்படி சொல்லி இருக்கலாம் நீ இதை மற்ற பையன்களிடம் போய் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது என்று சொன்னார். 
ஜோதி டீச்சர் கொடுக்கும் உச்சபட்ச தண்டனை தலையில் ஒரு குட்டு. டீச்சரின் அந்த குட்டு  பள்ளியில் பிரசித்தம். ஆனால் என்னை மட்டும் டீச்சர் ஒருபோதும் குட்டியது கிடையாது. இந்த நிலையும் சீக்கிரமே மாறிவிட்டது. 
மதிய உணவு வேளைகளில் பள்ளியில் பிள்ளைகள் குதித்து ஓடி அமர்க்களம் செய்வார்கள். எந்திரங்களைப் போல மாணவர்களும் ஆசிரியர்களும் நடத்தப்படும் இன்றைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் என் குழந்தைகளுக்கு இந்த சுதந்திரமும் சந்தோஷமும் இல்லை. 
தேர்வு நேரங்களில் ஆசிரியர்கள் வேறு பணிகளில் இருந்தால் அல்லது மதிய நேரம் எங்காவது வெளியில் சென்றிருந்தால் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.‌
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அன்று தேர்வு இல்லை என்றால் பொறுப்பு நான்காம் வகுப்புப்  பையன்களை வந்து சேரும். ஆனால் நான்காம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களின் உத்தரவுகளுக்கு பணிவதெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு கௌரவப்பிரச்சனை. 
நானும் ராமன் என்ற பையனும் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு   கத்திச்சண்டை போட்டோம். விஷயம் ஜோதி டீச்சர் காதுக்கு போய் விட்டது. டீச்சர் வெளியே வந்து  திட்டி விட்டு என் தலையிலும் ஒரு  குட்டு வைத்தார்கள்.  என் தலை மீது இருந்த வெண்ணையும்    உருகத் தொடங்கியது.
ஐந்தாம் வகுப்பு முடித்து மாற்றுச் சான்றிதழ் வாங்க சென்ற நாளில் டீச்சரை சந்தித்தது தான் கடைசி நினைவு. 
ஜோதி டீச்சர்  பெரும்பாலும் இந்தக் கட்டுரையை படிக்க வாய்ப்பில்லை. அதற்காக இது எழுதப்படவும் இல்லை.
 என்னுள் ஆசிரியத் தன்மை என்று ஒன்று இருப்பதாக யாரேனும் நினைத்தால் அதன் விதை ஜோதி டீச்சர் போட்டது. உங்கள் மாணவன் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறான் என்பது என்றேனும் உங்களுக்குத்  தெரிய வர வேண்டும் டீச்சர். 
பெயர் பொருத்தம் பற்றி சொல்லத் தொடங்கியிருந்தேன் 
பிள்ளைகளுள் பெரியவனுடைய கையெழுத்து திருத்தமாக இருக்கும். அவனை ஒவ்வொரு நாளும் எழுத வைத்து சரி பார்த்து  ஒழுங்குபடுத்தும் வேலையை அம்பத்தூரில் ஒரு டீச்சர் ஏற்றுக்கொண்டிருந்தார்.அந்த டீச்சர் பெயரும் ஜோதிதான். மீளவே முடியாது என்று நான் நினைத்து ஓய்ந்திருந்த  இருள் தருணங்களில் ஒரு நாள்  முற்பகல் வேளையில் எனக்கு அறிமுகமாகி என்னுள் நிறைந்த இவள் பெயரும் ஜோதி தான். 
சில பெயர்களுக்கும்  நமக்கும் நடுவில் இருக்கும் உறவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! வெறும் தற்செயல் என்று சொல்ல மாட்டீர்கள் என்றால் நாம் இன்னும் கூட பேசலாம். 

Comments

Post a Comment

Popular posts from this blog

தலையாலே தான் தருதலால்

நீலி இதழுக்கு நன்றி

மற்றும் ஒரு மைல்கல்!