நேற்று கிடைத்த அரு மணி
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை.
குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம் வாசகி பற்றி ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது? அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது.
காவியம் நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்பார்க்கிறது. நண்பர் சக்திவேலிடம் கேட்டபோது அவர் பார்வையற்றவர்கள் வாசிக்க கிடைக்கும் என்று பதில் அளித்தார். தொடர்ச்சியான தேடல், நேற்று இரவு சுமார் 10 மணிக்கு கிடைத்துவிட்டது . பார்வையற்றவர்களுக்காக எழுத்துணரியாக்கம் (OCR) செய்யப்பட்ட பதிப்பு. வாசிப்போம் என்ற பார்வையற்றவர்களுக்கான இணைய நூலகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. . .நூல்களை கொடையளிப்பது என்பது நம் மரபில் தொன்றுதொட்டு நிலைபெற்று இருக்கும் வழக்கமே ஆகும்.ஏதோ ஓர் இதயம் எங்கள் பொருட்டு கனிந்திருக்கிறது, ஓர் உள்ளம் எங்கள் பொருட்டு மலர்ந்திருக்கிறது அளவிட இயலாத கருணையின் துளி ஒன்று எங்கள் பொருட்டு திரண்டிருக்கிறது அறிய இயலாத அந்த ஒன்றிற்கு வணக்கங்கள்.நாவலை நாம் வாசிக்கும் வண்ணம் மென்பொருள் துணைக் கொண்டு தகவமைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் படித்தாக வேண்டும். வெண்முரசு போல ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் என திகட்டத் திகட்டப் படிக்க வேண்டும்.
இத்தகைய செயல்களின் பொருட்டே இங்கு வந்திருக்கிறேன் என்று எனக்கு நானே நிரூவிக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் அருளட்டும்!
ஆம், அவ்வாறே நிகழட்டும்!
Comments
Post a Comment