குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்
பல்கலைக்கழகத்தில் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் இருந்து என்னுடைய நூல்களை கொண்டு வந்து மாணவர்கள் அடுக்கி வைத்தார்கள். என்னுடைய அறையில் இடம் இல்லை என்பதால் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் ஒரு பீரோ நிறைய என்னுடைய நூல்களை வைத்திருந்தேன். இன்று ஜனவரி 24, 2026 காலை 10 மணி முதல் இந்த வேலைதான். நூல்கள் அடுக்கப்படும்போது சிலவற்றை எடுத்து தலைப்பைவாசிக்கவைத்துக் கேட்டேன். ஏதேதோ நினைவுகள்.
என்னுடைய அப்பா எனக்காக வங்கியில் ஆர் டி போட்டு புத்தக கண்காட்சிக்கு பணம் கொடுக்கும் ஞாபகம், புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகு அம்மா புத்தகங்களில் என் பெயரையும் வாங்கப்பட்டதேதியையும் எழுதி வைக்கும் திருவிழா ஞாபகம் அபிதான சிந்தாமணி வீட்டிற்கு வந்த ஞாபகம், பகவத் கீதையின் முதன்மையான உரைகளை விஸ்வநாதன் சார் வாசிக்க எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து கொடுத்த ஞாபகம்.
மாணவர்கள் சில புத்தகங்களை ஆசையுடன் கேட்டு எடுத்துச் சென்றார்கள்.
நாலாயிரத் திவ்ய பிரபந்த நூல் தொகுதியில் ஒரே ஒரு நூல் மட்டும் எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட்டு இன்றும் ஒரு பழைய மாணவரிடம் இருக்க்கிறது.
தொகுதியில் இல்லாத நூல் ஒரு பழைய துயரத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பையன் திவ்யப் பிரபந்தம் உணரப்போவதில்லை. உணரும் தகுதி அமைந்திருந்தால் அவன் இவ்வாறு இருக்கவும் போவதில்லை. என்னிடம் கேட்டு எல்லா தொகுதிகளையும்கூட அவன் எடுத்துச் சென்றிருக்கலாம். நூலாசிரியர்கள் கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்த சில புத்தகங்களையும் கூட மாணவர்களும் நண்பர்களும் அவர்களுக்கு வேண்டும் என்று கேட்டு எடுத்துச் செல்வதுண்டு. வர்தமானன் பதிப்பகம் சார்பில் தினமணிக்கதிரில் விளம்பரம் வந்தபோது அப்பாவை கேட்டுக் கேட்டு ஆசையுடன் வாங்கிக் கொண்டேன். அலுவலகம் முடித்து அப்பா நாலாயிரத் திவ்யப்பிரபந்த நூல் தொகுதிகளை வாங்கிக் கொண்டு வந்த இரவு ப்பொழுது, அம்பத்தூர் வீடு வெற்றிலைப் போட்டுக் கொண்டு அப்பா உட்கார்ந்து இருக்க அவர் முன்னே இருக்கும் டெஸ்க், சட்டையில்லாத அப்பாவின் உடம்பு அதில் இருக்கும் பூணூல்,, குழந்தைகளைப் போல டெஸ்க் மீது இருக்கும் நாலாயிரத் திவ்யப் பிரபந்த நூல் தொகுதிகள்எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. இரவுப் பொழுதில் தான் என்னால் மற்றவர் உருவங்களை ஓரளவு பார்க்க முடியும். அப்பா ,அம்மா , விஸ்வநாதன் சார் எல்லோரும் புறப்பட்டுப்போய்விட்டார்கள்.
என் அப்பா நல்ல நிறம், அவ்வளவு அழகு என்று இந்திரா சித்தி சொல்லியிருக்கிறார்கள்.
பெற்றோர்களை மதிப்பிடும் உரிமை பிள்ளைகளுக்குக் கிடையாது என்பதை மிக மிக பின்னரே அறிந்து கொண்டேன். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அப்பா படுக்கையில் கிடக்கும் நாட்களில் அம்மாவை அதிகம் தொந்தரவு செய்வார். அம்மாவும் அழுது புலம்புவார். என்னால் தாங்க முடியாது. இந்தக் கையால் அப்பாவை சற்று பலமாகத் தட்டுவேன். உயிரே போவதாக அலறுவார். அம்மா வந்து தடுக்கும் அவல நாடகம் அவ்வப்போது வீட்டில் அரங்கேறும்
. இப்போது அறையில் தனியே உட்கார்ந்திருக்கிறேன் எல்லா கணக்குகளும் எங்கேனும் எப்படியேனும் நேர் செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறேன்.
என்ன சரிதானே அப்பா!
அறையில் வேக்கை அடிக்கிறது
அலைகள் வெளியிட்ட கதத்தின் நான்கு வேதங்கள், ஆசிரியர் பரிந்துரைத்து நான் வாங்கி வந்த புத்தரும் அவரது தர்மமும், சிங்காரம் வீட்டில் இருந்தபோது அவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் வாங்கி வந்த நாய் வளர்ப்பு பற்றிய ஆங்கில நூல் எல்லாம் அடுக்கப்படுகின்றன. எல்லாப் புத்தகங்களும் இப்போது எனக்கு இன்னும் பக்கத்தில் என்னுடைய அறையிலேயே .
இப்போது என் அறையில்
புத்தகங்கள் வீற்றிருக்கின்றன அரசர்களைப் போல.
கவனிக்கின்றன ஆசிரியர்களைப் போல,,,
தனிமையில் என்னுடன் பேசுகின்றன நண்பர்களைப் போல!
Comments
Post a Comment