ஹய்ய

சென்னையிலிருந்து மைசூர் பயணம். சதாப்தி எக்ஸ்பிரஸில் 22 ஜூன் 2026 அன்று சென்றேன். காலைச் சிற்றுண்டி, காப்பி எல்லாவற்றிற்கும் சேர்த்தே முன்பதிவு செய்துவிட்டோம்.  எங்களுக்கு  இது போன்ற சற்று வசதியான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் நடைமுறை சார்ந்து சில நெருக்கடிகள் இருக்கின்றன. 
            அவர்கள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைச் சரியாகப் பிரிக்க வேண்டும். பக்கத்து இருக்கையில்  உட்கார்ந்திருப்பவர் மீது பட்டுவிடக்கூடாது.. கஷ்டம் தான். இதன் காரணமாகவே பெரும்பாலான பயணங்களில் எதுவும் சாப்பிடுவதில்லை. 
          மைசூர் பயணத்தின் போது ஒரு பையன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். நீங்கள் எதுவரை போகிறீர்கள் அங்கிள் என்று கேட்டான். நான் புரிந்து கொண்டு உங்களுக்கு ஜன்னல் இருக்கை வேண்டுமா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னவுடன் கொடுத்துவிட்டேன். காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு பெங்களூர் ரயில் நிலையம் வரும். என்னைக் கொஞ்சம் எழுப்பி விட முடியுமா அங்கிள் என்று கேட்டான். சரி என்று சொல்லி அலாரம் வைத்துக் கொண்டேன்.  எழுப்பியபோது இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்று சொல்லி  சார் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டார்.
       பிள்ளையை ஒன்றும் சொல்லக்கூடாது. காலையில்  உணவுப் பொட்டலங்களைப் பிரித்துக் கொடுத்து சமத்தாக உதவி செய்தது.‌ பசி எடுத்திருக்கலாம்,  குழந்தை தூக்கத்தில்  கண் விழித்திருக்கலாம் 
        சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலிருந்து   சென்னைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸில் வந்தபோது பணியாளர்கள் ரொம்பவும் அனுசரணையாகத் தான் நடந்து கொண்டார்கள்.  மைசூர் பயண அனுபவம் அப்படி இல்லை. எல்லா ஊர்களும் ஒன்று போல் இல்லை என்னும் போது எல்லா மனிதர்களும் எப்படி ஒரே விதமாக இருப்பார்கள்? 
           11 மணிக்கெல்லாம் ஒரு கனமான  பொட்டலத்தைக் கொண்டு வந்து நீட்டிவிட்டூ பிரியாணி என்றார்கள். நம்மால் ஆகாது சாமி என்று கூறிவிட்டேன். இத்துடன் எல்லாம் முடிந்திருக்க வேண்டும். 
          திடீரென்று ஒருவர் ஒரு துண்டுச்சீட்டை நீட்டினார், அதுவும் என்னிடம். உதர் உதர் என்றார். ‌ எதனை உதற வேண்டும் என்று தான் புரியவில்லை. 
       அதன் பிறகு அலாதியான வட கிழக்குக்  குரலில்.     ஹய்ய‌.  என்று சொல்லிக்கொண்டே  போய்விட்டார். இந்த ஹைய்ய எதற்காக?
         சொன்னதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதால்.  எனக்காகச் சொல்லப்பட்டதா,  என்னைக் கேட்க வேண்டியிருந்ததால் உண்மையில் அவருக்கு அவரே சொல்லிக் கொண்டதாகவும்  இருக்கலாம்.   
ஒன்றும் புரியவில்லை.  ஹய்ய!                       மைசூரில் இறங்கியதும்  ஆட்டோ பிடிக்கச் சென்றேன்.  ஆட்டோக்காரர்களுக்குள்  சண்டை.  அவர்களும் சண்டைக்கு நடுநடுவே ஹய்ய என்கிறார்கள். ஒரு சின்ன வித்தியாசம்.  வடகிழக்கு ஹய்ய இல்லை, இது மைசூர் கன்னடம். அப்பட்டமான கர்நாடக ஹய்ய! 
         மாலை 4 மணிக்கு சட்டென்று ஒன்று புரிந்தது. அந்த ரயில் பணியாளர் அவர்கள் பயணிகளுக்குச் செய்யும்  சேவை எப்படி இருந்தது என்று கருத்து கேட்கும் விதமாக கண்பார்வையற்ற என்னிடம் ஒரு கையெழுத்துதான்  கேட்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்னை டபுள் டக்கர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த போது இப்படி ஒரு வழக்கம் இருப்பது எனக்குத் தெரியவந்தது. 
         என்ன செய்வது, இது எனக்கு ஞாபகம் வருவதற்குள் என்னை மைசூரில் இறக்கி விட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் மறுபடியும் சென்னைக்குப்  புறப்பட்டு பாதி தூரம் போய்விட்டது. 
           ‌ஹய்ய! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

நேற்று கிடைத்த அரு மணி