அசைவறு மதி

பழனிக்குமார் எழுதும் சுய முன்னேற்றத் தொடர் உயிர்மை  இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அசைவருமதி என்று பெயர்.  ஏப்ரல் 25 2026 அன்று நான் வாசித்தபோது 17 கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பழனிக் குமார் அறிவுரை மழை பொழியாமலும் வாசகர்களைச் சிரிக்க வைக்கிறோம் என்று அசட்டுத்தனம் காட்டாமலும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.  
     ஓர் எடுத்துக்காட்டு. 
      ஓர் செயலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். முதல் நாளில் உற்சாகமாக ஆரம்பித்தோம். நம்முடைய உற்சாகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடுகிறது. நம்முடைய முதல் நாள் உற்சாகத்தை மறுபடியும் எவ்வாறு திரும்பப் பெறுவது? பழனிக் குமார் விளக்குகிறார். 
    நம்முடைய வாழ்வில்  நாம் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும் போது குழந்தை நிலை, மத்திய வயது நிலை, முதுமை நிலை, நிபுணத்துவ நிலை  இவற்றில் ஒரு நிலையில் அமைகிறோம் என்கிறார் பழனிக் குமார். குழந்தை நிலையில் ஒரு செயலைச்  செய்யும் போது நம்மிடம் அச்சமும் படபடப்பும் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடவும் செயலை சிறப்பாக மேற்கொள்வதற்குக்  கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு நம்மிடம் அதிகமாக இருக்கிறது. முதன்முதலில் வேலைக்குச் செல்லும் நாளில்  அவ்வளவு உற்சாகமும் சந்தோஷமும் வருவதற்கு இந்த ஈடுபாடு என்ற மன உணர்வு தான் காரணம். இந்த இயல்பு ஒரு குழந்தையிடம் அதிகமாக இருப்பதை நம்மால் கவனிக்க முடியும். 
     மத்திய வயது நிலையில் இருக்கும்போது செயலைச்செய்ய வேண்டும் என்ற விருப்பமும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் ஒருசேர இருக்கின்றன. ஆனால் விருப்பத்தை விட பயம் கூடுதலாக இருக்கிறது. அதனால்தான் நாம் உற்சாகம் இல்லாமல் முடிக்க வேண்டுமே என்று கடமைக்காக ஒரு செயலை மேற்கொள்கிறோம். 
      மூன்றாவது நிலை முதுமை நிலை. இங்கு முதுமை அனுபவம் என்பதை எதிர்மறையாகத் தான் பழனிக் குமார் எடுத்தாள்கிறார்.  நமக்கு அனுபவம் இருக்கிறது என்ற காரணத்தினால் பல நேரங்களில் நாம் செயல்களை மேற்கொள்வதில் நம்மையும் அறியாமல் அலட்சியமாக இருக்கிறோம். தீபாவளி அன்று வேண்டுமென்றே தெரிந்தும் பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் பட்டாசுகளை வெடிக்கிறோம்.. நம் மீது நெருப்புப் படாது என்ற எண்ணம் ஒருவகை அலட்சியத்தால் வருகிறது. 
     தீபாவளி அன்று கைகளில் பட்டாசு கொளுத்தும் நமக்கு பின்னால் இதுபோன்ற அலட்சிய மனநிலை செயல்படுகிறது..  இந்த உதாரணம் எனக்குத் தோன்றியது. இளைஞர்கள் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டும் உதாரணத்தை எடுத்துக்காட்டுகிறார் பழனிக்குமார். 
       நான்காவதாக இருப்பது நிபுணத்துவ மனநிலை. ஒவ்வொரு முறை செயலை மேற்கொள்ளும் போதும் புதிதாக அதில் ஏதேனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம், , அதனை மேற்கொள்வதில் ஒரு நுட்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை. இதுதான் நிபுணத்துவ மனநிலையில் பின்னணியில் செயல்படுகிறது. 
நம் அன்றாட சிக்கல்களுக்கு தீர்வுகளையோ, ஆலோசனைகளையோ  சுய முன்னேற்ற நூல்களில் எதிர்பார்ப்பதை விட ஒரு புதிய வகை பார்வையை அணுகுமுறையை அவை வழங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் சுய முன்னேற்ற நூல்களை நன்றாகவே வாசிக்கலாம். 



 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

நேற்று கிடைத்த அரு மணி