கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்
இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்
பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. . இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.
ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.
ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில் உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.
ஓர் எடுத்துக்காட்டு.
ஏதிலிகளின் ஆண்டவரே
உமது ஜெபக் கூட வாசல் அண்டை
பலூன் காரர்களின் சிலுவை மரத்தை துளிர்க்கப்பண்ணினீரே
உமக்கு ஸ்தோத்திரம்
ஓடும் ரயிலில் காட்சி இழந்தவன் கை மூங்கிலின் ஒன்பது கண்களையும் திறந்தீரே
உமக்கு கோடான கோடி நன்றியப்பா.
தேவ அக்னி அசைவாடும் தாரோடையில் தேயாத துடுப்புகளாக செருப்புகளை மாற்றித் தந்தீரே ஆண்டவரே
பரியாசக்காரர்கள் கண்ணுறாத படிக்கு உம்முடைய வாலிபப் பிள்ளையின் காலுறை பொத்தலைக் காத்துக்கொள்ளும் கர்த்தாவே
குணமளிக்கும் கூட்டத்தின் கைகளுக்குச் சிக்கி விடாமல் ஆண்டவரே உமது தேவ ஜனங்களை தப்பி விடிவியும் ராஜா.
( கவிதை நினைவிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. பிழைகளை கவிஞரும், நண்பர்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும்).
. இந்தத் தொகுப்பை படித்துவிட்டு வெளியே புறப்பட்டபோது வாசற்படியில் உட்கார்ந்திருந்த மூதாட்டியை பார்த்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. இளநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த இளநீர் காரர் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நேர்மறையான அகத்தூண்டுதல்களை ஏற்படுத்தும் காரணத்திற்காக எல்லாப் புகழும் மகிமையும், ஸ்தோத்திரமும் ஜான் சுந்தருக்கு மட்டுமே.
2026 விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கவிஞர் ஜான் சுந்தருக்கு வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment