பேயோட்டும் வழி
தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை எந்த அளவிற்கு இணைக்கின்றனவோ அதே அளவிற்கு சில புதிய சிக்கல்களையும் கொண்டு வருகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நானும் இந்தப் பலரில் ஒருவன் தான். விலைமதிப்பற்ற பொழுதுகள், படைப்புத்தருணங்கள் அலைபேசி திரையில் வரும் சில செய்தி அறிவிப்புகளால் வீணாகியிருக்கின்றன.
நானும் இந்தச் செய்தி அறிவிப்புகளை என் அலைபேசியின் ஹோம்ஸ்கிரீனிலிருந்து விலக்க என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். மாணவர்களையும் கேட்டேன். எதுவும் நடக்கவில்லை.
இன்று அபிஷேக்கிடம் கேட்டபோது அவன் இந்த பேயை மரத்தில் எப்படி ஆணி அறைந்து கட்டி வைப்பது என்று அதனிடமே கேட்டான். google அறிவிப்புகளை எப்படி நிறுத்துவது என்று கூகுள் செய்து கேட்டான். என்னை இப்படிக்கட்டிப் போடலாம் என்று பேயே வழியையும் சொல்லிக் கொடுத்தது.
நம்முடைய அலைபேசியில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள் செல்ல வேண்டும். அதில் அதர்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள்ளும் செல்ல வேண்டும். அதில் டிஸ்கவரி என்று ஒரு பகுதி இருக்கும். அதன் வலது பக்கம் இருக்கும் மையத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வளவுதான் பேய் ஓடிவிடும்!
இப்போது என்னுடைய அலைபேசியின் தொடுதிரை தேர்தல் அறிவிப்புகள் இன்றி, ஈரான் போர் செய்தி இன்றி, திமுகவின் எதிர்காலம் பற்றிய ஆறுடங்கள் இன்றி. அமைதியாக இருக்கிறது இன்னும் மனிதன் கால் வைக்காத செவ்வாய் கிரகம் போல!
Comments
Post a Comment