குருஜியிடமிருந்து பெற்றுக் கொண்டது
யோகம் என்பது ஓர் எட்டு வழிச்சாலை. இயமம் நியமம் ஆகியவை இந்த சாலையின் முதல் இரு வழித்தடங்கள்.
தூய்மை, மகிழ்ச்சி, தவம், ஒவ்வொரு நாளும் தன்னை அறிதல், இறையாற்றலுக்குஅற்பித்தல் ஆகியவையே ஐந்து நியமங்கள் . ஒவ்வொரு நாளும் யோகமாணவன் தன்னை தன்னுள் நிகழும் மாற்றத்தை அறிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவன் தன்னை தொகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நனவு நிலை அனுபவங்களுடன் கனவு முதலியவற்றின் அவதானிப்புகளும் அவசியம். நாம் உண்ணும் உணவும் நம்முடைய அன்றாட அனுபவங்களும் கனவுகள் தோன்ற காரணமாகின்றன என்பது குருஜி சௌந்தர் அவர்களின் கருத்து. உணவு எவ்வாறு கனவுகள் உருவாக பங்களிக்கின்றன என்பது குறித்து இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனவே இது தொடர்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் அன்றாட அனுபவங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன.
ஏழு மார்ச் 2026 சனிக்கிழமை இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. எங்கள் அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ராமசாமித் தெரு வீடு அது. நான் ஒரு பள்ளி மாணவன். எங்கள் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டி வந்திருக்கிறது. அது பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுகிறது. வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியிலிருக்கும் ஒரு பெரிய இடைவெளி மூலமாக அது வெளியே ஓடிவிட்டது. அப்பா அதனை மறுபடியும் வீட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார். இதனை கட்டிப்போட்டு விடலாம் என்று நான் சொல்ல அப்பா மிக மெல்லிய சங்கிலியால் அதனை ஜன்னலுடன் சேர்த்துப் பிணைத்து விடுகிறார். அது கீழே படுத்தால் உடம்பு முழுக்க மண்ணாகிவிடும் என்பதால் அப்பா அது படுத்துக்கொள்ள வசதியாக ஒரு பாய் கொண்டு வந்து விரித்து விடுகிறார். நாய் படுத்துக்கொள்ள பாய் எல்லாம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி நான் அந்தப் பாயை எடுத்து மடித்து வாசல் நிலப்படி கதவருகே வைத்துவிடுகிறேன். அம்மா இந்த அப்பாவைப் பார் என்று நான் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்
கனவு கலைந்து விடுகிறது
நனவு நிலை அனுபவங்களுக்கும் கனவிற்கும் என்ன தொடர்பு என்பதில் தானே நம்முடைய உரையாடல் தொடங்கியது,
ஏழு மார்ச் சனிக்கிழமை அன்று இரவு சுமார் 9 மணி அளவில் இது நிகழ்ந்தது. நான் கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் எனக்கு எதிரில் ஒருவர் நாய் ஒன்றை அழைத்து வந்து கொண்டிருந்தார். இரவில் என்னால் ஓரளவு பார்க்க முடியும். வெள்ளை வெளேரென்று இருந்த நாய் அது. குட்டையாக மொழு மொழு என்று இருந்தது
ஒரு வயது இருக்கலாம். அல்லது ஒன்றரை வயது. வீட்டிற்குள் போக மாட்டேன் என்று வாசலில் நின்றபடி முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. அவர் தெலுங்கு மொழியில் ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்று போதாபோதா என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் வளர்த்து வந்த லபரடார் நாயின் ஞாபகம் வந்துவிட்டது. சிங்காரம் என்று பெயர்.வாழ்வில் ஏற்பட்ட எத்தனையோ நெருக்கடிகளில் ஒன்றாக அதனையும் நான் பிரிய வேண்டி இருந்தது. பெங்களூரில் செயல்படும் ஆதரவற்ற விலங்குகளுக்கான ஓர் இல்லத்தில் விட்டு விட்டு வந்தேன். இப்போது நாய் வளர்க்க வேண்டும் என்று என் குழந்தைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எங்கள் குடும்பச் சூழலில் அதற்கெல்லாம் இடமில்லை. . இந்த நிகழ்வுகளுக்கும் நான் சற்று முன் குறிப்பிட்ட கனவிற்கும் இடையில் உள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கவும். நம் அன்றாட அனுபவங்கள் கனவு உருவாக ஏதோ ஒரு வகையில் பங்களிக்கிறன என்னும் யோகத்தின் அறிதல் எவ்வளவு சரியானது என்பது புரிய வரும்.
நண்பர்களே நாம் யோகம் பயில்வோம் !
Comments
Post a Comment