ஒரு காட்டுக் குரங்கை தோட்டக் குரங்காக மாற்றும் வித்தை
ஸ்ரீ சத்யானந்த யோக மரபில் யோகநித்ரா என்ற ஒரு பயிற்சி இருக்கிறது. யோகத்தின் எட்டு வழிப் பாதையில் ப்ரத்யாகாரம் என்னும் பிரிவை சார்ந்த ஒரு பயிற்சி இது. குரு சத்யானந்தர் அவர்களால் இந்த பயிற்சி நன்கு வடிவமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி தொடர்பான தொடக்கநிலை புரிதலுக்கு எவ்வாறு வந்தார் என குரு சத்யானந்தர் அவர்களே கூறியிருக்கிறார்கள். பாரிஸ் நகரில் முனைவர் டோமர் என்பவரின் இல்லத்தில் ஆற்றிய உரையில் யோகநித்ரா பயிற்சிக்குரிய அடிப்படைக் கருதுகோள் எவ்வாறு வந்தது என்று குரு விளக்கியுள்ளார்கள்.. தம்முடைய ஆசிரியர் சிவானந்தர் அவர்களுடன் தாம் தங்கியிருந்த காலகட்டத்தில் வேதக் கல்வி நிகழும் ஆசிரமம் ஒன்றை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு குரு சத்யானந்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இரவுப் பொழுதில் ஆசிரமத்தை கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. காலை நான்கு மணி அளவில் இவர் உறங்கச் செல்வதுண்டு. சிறிது காலம் கழித்து இவருக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டன. இவர்களின் மூல ஆசிரமத்தில் ஒரு விழா. அந்த விழாவில் வேத பாராயணம் செய்ய இவர் முன்பு பணியாற்றிய ரிஷிகேஷ் நகர ஆசிரமத்தில் இருந்து குழந்தைகள் வந்திருந்தார்கள். குழந்தைகள் வேத மந்திரங்களை உச்சரிக்கும் போது அவற்றைத் தெளிவாக நினைவு கூற குரு சத்யானந்தர் அவர்களால் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த வேத மந்திரங்களை எங்கு எப்போது கேட்டார் என்று அவரால் நினைவு கூற இயலவில்லை. இது தொடர்பாக குரு சிவானந்தர் அவர்களிடம் இயல்பாக மாணவர் சத்யானந்தர் கேட்ட நிலையில் இந்த மந்திரங்களை உறக்கத்தில் கேட்டிருக்கலாம் என்று ஆசிரியர் விடையளிக்கிறார். யோகநித்ரா பயிற்சி என்னும் ஆலமரத்தின் முதல் விதை இந்த இடத்தில் சத்யாநந்தர் அவர்களின் உள்ளத்தில் எழுகிறது. விழிப்பு நிலையில் மட்டுமல்ல கனவு உறக்கம் முதலிய வேறுபட்ட நிலைகளிலும் அறிதல் நிகழ்கிறது. அந்த அறிதல்களை பெற்றுக் கொள்வதற்காக மனத்தை படிப்படியாக ஆயத்தப்படுத்த வேண்டும் என்பது யோக நித்ரா பயிற்சியின் அடிப்படைக் கருதுகோள். புலன்களை ஓய்வு கொள்ளச் செய்து மனதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இந்தப் பயிற்சி உதவுகிறது.
உங்களுக்கு யோகநித்ரா கற்கும் நல்வாய்ப்பு அமையட்டும். காலை சுமார் 7:00 மணி ஆகிறது. எனக்கான பயிற்சி நேரம் இது.
நண்பர்களே யோகம் பயில்வோம்!
Comments
Post a Comment