நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி

நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம்.  நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ளம் கேட்கட்டுமே மோர் என்று அதே விளம்பர வாசகத்தை சற்று மாற்றி தலைப்பாக இட்டு குளிர்பான கம்பெனிகளின் அரசியல்களை விளக்கி தினமணியில் எழுதினார்கள். அவ்வாறே நர்மதை கரையில் ஒரு தர்மயுத்தம் என்ற பெயரில் நர்மதை கரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலியல் போராட்டங்களை விளக்கி எழுதினார்கள். இப்படி என்னுடைய தேடலை தினமணி விரிவுபடுத்தி வந்திருக்கிறது. 
நான் திருவள்ளூரில் உள்ள திருமுருகன் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தினமணி இதழில் வெளிவரும் நடுப்பக்க கட்டுரையை நண்பகல் உணவு இடைவேளையில் தவறாமல் வாசிப்பதுண்டு. புருஷோத்தமன் என்ற மாணவரும் இன்னொரு தோழியும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு எனக்காக ஓடிவந்து அதனை வாசித்துக் காட்டுவார்கள். அந்த இதழில் என்னுடைய நேர்காணல் இடம் பெறுவது உண்மையிலேயே பெருமையாக தான் இருக்கிறது. அம்மா இருந்திருக்க வேண்டும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தவாறு நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியிருக்கிறேன். 
நண்பர் அருள் செல்வன் இந்தப் பணியை முன்னெடுத்துள்ளார். நண்பர்கள் பலர் என்னை அழைத்து நேர்காணல் தொடர்பாக பேசினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பலருடன் பேச முடிந்ததில் மகிழ்ச்சி.  

 இனிய நினைவு. நன்றி அருள் 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்