நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி
நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம். நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ள...