நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன்

எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமியும் இணைந்து  ஒரு நாள்  கருத்தரங்கை நடத்துகின்றன.  டிசம்பர் 12 2025 வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
        எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மூன்றாவது நாவல் அனாதை. இந்த நாவலை இருத்தலியல் நோக்கில் அணுகியிருக்கிறேன். தங்கப்பனை  கதிர் நோக்கா கையிருள் என்று வரையறுத்திருக்கிறேன். கை என்ற சொல்லுக்கு சிறுமை என்றும் பொருள் உண்டு. கைக்கிளை என்பதற்கு  சிறிய உறவு என்பதாகத்தான் நம் இலக்கணமரபு விளக்கம் கொடுக்கிறது . 
 
     புத்தம் வீடு நாவல் குறித்து நண்பர் சுப்பிரமணி  இரமேஷ் ஒரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். புத்தமிடு நாவலை நான் இந்த சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பது அன்புத் தோழி பேராசிரியர் ஜெ சுடர்விழியின் கட்டளை. ஒரு மிகச் சிறந்த நாவல் ஒன்றை
 படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது 
       புத்தம் வீடு ஒரு கிளாசிக் தான் ஒப்புக்கொள்கிறேன். நாவலின் இறுதி அத்தியாயத்தில் தங்கராஜ் வந்து லிசியின் வீட்டு வாசலில் நிற்பான். லிசி விருப்பப்படித் தான் அவளுக்குத் திருமணப் புடவை எடுக்க வேண்டும் என்று சொல்லி லிசியை வீட்டிற்கு வெளியே வரவேண்டும் என்று கூப்பிடுவான். தங்கராஜ் அழைப்பதாக அவன் தம்பி செல்லப்பன் வந்து  லிசியிடம் சொல்லுமிடத்தில்  அமைந்துள்ள உரையாடல் பகுதியை நீங்கள் கண்டிப்பாக  படிக்க வேண்டும். 
     ஆசிரியர் எஸ் வி ராஜதுரை அவர்கள் எழுதியுள்ள மார்க்சியமும் இருத்தலியலும் என்னும் நூலை இந்த சந்தர்ப்பத்தில் படித்தது ஒரு நல்ல அனுபவம். 20 வருடங்களுக்கு முன்பு இந்த நூலைப் படித்திருந்தேன் என்றாலும் தற்போது படிப்பது  பல விஷயங்களில் எனக்கு தெளிவை நல்கியது. நான் எதிர்பார்க்கும் அரசியல் சூழல் நிலவுவதில்லை என்னும் வருத்தம் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு . 
 ஐரோப்பிய வரலாற்றுச் சூழல்கள், சம்பவங்கள், ஏற்ற இறக்கங்கள் இவற்றை ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது இந்த அளவு பதற்றம் எனக்குத் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது . மொத்தத்தில் இரண்டு வாரங்கள் வேகமாக ஓடிவிட்டன.  
     நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன். சாகித்ய அகாடமி கூட்டத்தில் பேசுகிறேன். கட்டுரையை முழுமையாக எழுதி நேற்றே  அனுப்பிவிட்டேன். 
       இந்த சந்தர்ப்பத்தில் சென்னைக் கிருத்துவக் கல்லூரி தமிழ்த்துறை ஆசிரியர்கள் குறிப்பாக என்னுடைய அன்புத் தோழி பேராசிரியர் ஜெ. சுடர்விழி , தொடர்புடைய நூல்களை நான் படிப்பதற்கு உதவி புரிந்தும் கட்டுரையை மேய்ப்பு நோக்கி உதவியும் உடன் நிற்கும் என்னுடைய மாணவர்கள் எல்லோருக்கும் என் அன்பு. 

     வெள்ளி விரைவில் வரும்! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

பெண்ணுண்டோ மனோண்மணியே

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்