பெண்ணுண்டோ மனோண்மணியே

குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களைப் படித்திருக்கிறேன், பாடம் நடத்தியிருக்கிறேன். அண்மையில் வாசித்தத் தமிழ் விக்கி பதிவு ஒன்றில் 
என்னை விட்டால் உனக்கு எத்தனையோ பேர் மாப்பிள்ளைமார், 
உன்னை விட்டால் எனக்கு பெண் உண்டோ மனோன்மணியே! 
என்று எழுதியிருப்பதாக நினைவு. 
 அந்த நிமிடத்தில் இவரை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. 
குணங்குடியார் சென்னையில் தான்அதிக காலம் வாழ்ந்திருக்கிறார். சென்னையில் 14 ஆண்டுகள் அவர் தியானத்தில் இருந்தார் என்பது ஐதீகம் 
 தொண்டியிலிருந்து  வந்து தங்கிய இடம் தொண்டியார் பேட்டை என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது தண்டயார் பேட்டை என்று மாற்றமடைந்ததாக அறிகிறேன். அப்படி என்றால் குணங்குடியாரின் தர்கா தண்டையார்பேட்டையில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துத் தேடியபோது அது பழைய வண்ணாரப்பேட்டையில் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. நேற்று ஜனவரி 13 திங்கட்கிழமை மாலையில் புறப்பட்டோம். 
 அம்பத்தூரிலிருந்து வழக்கமான பாதையில் செல்ல முடியவில்லை.  காரணம் மெட்ரோ பணி. அம்பத்தூரில் இருந்து மதுரவாயல் சென்று அங்கிருந்து வியாசர் பாடி, ராயபுரம் வழியாக வண்ணாரப்பேட்டை சென்றோம். எப்போதும் நம்முடன் வரக்கூடிய நண்பர் லோகநாதன் தான் இந்த முறையும் நமக்காகக் கார் ஓட்டினார். அபிஷேக் பத்தாம் வகுப்புத்தேர்வு எழுதுவதற்கு முன்பு அவனை இங்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. 
வடசென்னையின் எல்லா இலக்கணங்களுடனும் பாதைகள்  இருந்தன. 
இடுங்கிய சந்துகள், நெரிசலான பாதைகள், சாலையில் சைக்கிள் ஓட்டிச் சாகசம் செய்யும் பையன்கள்,  நடுச்சாலையில் விளையாடும் குழந்தைகள் இவற்றுடன் நிறைந்து ததும்பும் எங்கள் அழகான சென்னை செந்தமிழ் !
அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை இரண்டும் உண்மையில் இரு வேறு உலகங்கள் தான்.  இதை இன்றும் கண்கூடாக எல்லோரும் பார்க்க முடியும். 
சற்று தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு நான்,  அபிஷேக் இரண்டுபேரும்  நடந்து போனோம். தண்ணீர் தேங்கிய பள்ளங்கள், தமிழ் உருது எனக் கலவையான மொழிச் சூழல் இவை எல்லாம் எளிய மக்கள் குறிப்பாக இஸ்லாமியர் வாழும் பகுதி என்று நன்றாகவே உணர்த்தின.  ஒரு பையன் அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பிடித்துக்  கொண்டிருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அடிபம்பு சத்தம் காதில்  கேட்டது. தர்கா என்றால் பலபேருக்குத்  தெரியவே இல்லை. எப்போதும் போல கூகுள் வரைபடம்தான்  உதவிக்கு வந்தது. கடைசியாக ஒரு அம்மா வழி சொன்னார். 
வீடுகளுக்கு இடையே இன்னொரு பழைய வீடு போலத்தான் தர்காவும் இருந்தது. ஒரு பாட்டி தெருவோரமாக படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். போகிப் பண்டிகை என்பதால் பையன்கள் கையில் விதவித  டமாரங்களை  வைத்துத் தட்டிக் கொண்டிருந்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமாக வாசித்தார்கள். 
தர்காவின் உள்ளே சென்றபோது 60 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வரவேற்றார். குணங்குடியாரின் அடக்கப் பகுதிக்கு அவர் எங்களை அனுமதித்தார். இவ்வளவு பக்கத்தில் போக முடியும் என்று நினைத்திருக்கவில்லை.  நாங்கள் சென்றபோது ஒருவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். குணங்குடியார் 
 மீது பூமாலைகள் வைக்கப்பட்டிருந்தன. எங்கள் கைகளை வைத்து அந்த அம்மா பிராத்திக்கச்சொன்னார். 
நானும் இவனும் 20 நிமிடங்கள் உள்ளே அமர்ந்திருந்தோம். வெளியே வந்த பிறகு பக்கத்தில் இருந்த
 இன்னும் சில அடக்கத் தலங்களையும் பார்த்து விட்டுச் செல்லுமாறு அந்த அம்மா கேட்டுக் கொண்டார். குணங்குடியார் அடக்கத் தலத்துக்கு இடது பக்கம் இருந்த பகுதி ஊமை அப்பா அடக்கத்தலம் என்று அறியப்படுகிறது. குணங்குடி யார் 14 ஆண்டுகள் தியானத்தில் இருந்த போது பக்தர்களின் கோரிக்கைகளை இவர் தான் நிறைவேற்றினார் என்கிறார்கள். 
குணங்குடியாருக்கு வலது பக்கம் புலவர் நாயகம் அடக்கத்தலம். குழந்தைகளுக்கு கல்வியை அவர் அருளுகிறார். புலவர் நாயகம் கப்பல் வணிகர் ஒருவரின் மகன். தம்முடைய மகன் குணங்குடியாருடன் சேர்ந்து துறவு நெறியில் செல்லக்கூடாது என்று நாயகத்தின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர் வாழ்க்கை குணங்குடியார் சேவையிலேயே இறுதிவரை கழிகிறது. நாயகத்தின் அன்னையும் தம் முதுமை காலத்தில் வண்ணாரப்பேட்டை க்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். வள்ளலாருக்கு ஒரு தொழுவூர் வேலாயுத முதலியார் போல் இவருக்குப் புலவர் நாயகம். குணங்குடியார் வாக்கியங்களுக்கு எழுத்து வடிவம் தந்தவர் புலவர் நாயகம் தான் என்று சொல்லப்படுகிறது. 
புலவர் நாயகம் அடக்கத் தலத்துக்கு அருகில் ஒரு பெண்ணின் அடக்கத்தலமும் இருக்கிறது. இந்த அடக்கத்தலக் கட்டுமானத்தில் ஒரு நுண்ணிய வேறுபாடு காணப்படுகிறது.  குணங்குடியார் உள்ளிட்ட மற்றத்  துறவிகளின் அடக்கத் தலங்கள் தரையில் இருந்து சற்று மேல் எழுந்து காணப்பட அம்மையாரின் அடக்கத்தலம் மட்டும் தரையோடு தரையாக இருக்கிறது. . அம்மையார் ஒரு பெண் என்பதால் இப்படி இருக்கிறதா? அறிஞர்கள் தான் சொல்ல வேண்டும் , சொல்லி யிருப்பார்கள். இந்த அம்மையார்  குணங்குடி யாருக்கு 14 ஆண்டுகள் சேவை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பெண்ணின் தலைமுறையினர் தான் தம்முடைய தர்காவை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும் என்று குணங்குடியார் ஆணையிட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த  அம்மையார் ஒருவர் தற்போது தர்காவை கவனித்துக் கொள்கிறார் .  பெண்ணின் அடக்கத்தலம் இருக்கும் அறைக்கு நாங்கள் சென்றபோது அங்கே ஒருவர் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். இங்கு மட்டும்தான் பெண்கள் செல்ல அனுமதி இருக்கிறது. மற்ற ஆண் துறவிகளின் அடக்கத்தலம் அருகே செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை.  
எல்லாம் முடிந்தது என்று நாங்கள் புறப்பட்டு விட்டோம். அப்போது நிர்வாகப்பொறுப்பில் இருந்த அம்மையார்  14 ஆண்டுகள் குணங்குடியார்  தவம் செய்த அறைக்குச் சென்று  சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்யும் படி எங்களைக் கேட்டுக் கொண்டார்.  இருவரும் தயங்கியபடி உள்ளே சென்றோம். குணங்குடியார் அடக்கத்தலத்துக்கு இடது பக்கம் மிகவும் பள்ளமான இடத்தில் ஓர் அறை இருக்கிறது. அங்கு செல்ல மிக குறுகலான படிக்கட்டுகள். குனிந்து தான் செல்ல வேண்டும். ஒருவர் மட்டும்தான் செல்ல முடியும். அந்த அளவு பள்ளத்தில் அறை இருக்கிறது. நாங்கள் உள்ளே சென்று உட்கார எதிரில் குணங்குடியார் படம் பூமாலை இடப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.  நான் உட்கார தலை தட்டியது. அங்கு சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன்.. பிரார்த்தனை என்றால்  மிகப்பெரும்பாலும் மௌனம் தான். நெருக்கடிகள் வரும்போது என்னையும் மீறி தொண்டரடிப்பொடியாழ்வாரின் பச்சைமா மலை போல் மேனி 
என்ற பாசுரத்தை சிறு வயது முதல் என்னுடைய நா உச்சரிக்கும்‌ ஆனால் பெரும்பாலும் இறைவனிடம் கோரிக்கைகள் வைத்துப் பழக்கம் இல்லை. 
உமர் கயாம் பாடல் ஒன்றை கவிமணி மொழிபெயர்ப்பில் படித்ததுண்டு 
ஈசா என்னைக் காத்திடுக! 
ஏழை ஏழை ஏழை என்றே
கூசாது ஏனோ சொல்கின்றாய், 
குறைகள் சொல்லி அலைகின்றாய். 
பேசாத அவனைக் காவானோ, 
பெற்ற மகனைப் பிரிவானோ? 
ஆசான் நீயோ? ஈசன் என்ன 
அறியாச் சிறிய பாலகனோ! 
நாங்கள் வெளியே வரும்போது எங்களுக்கு தீர்த்தம் கொடுத்தார்கள். 
ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் அன்னதானம் நடக்கிறது. தர்காவில் அசைவ உணவுக்கு அனுமதி இல்லை. நாமே வீட்டில் சமைத்துக் கொண்டுவந்து கொடுக்கலாம், இங்கேயும் சமைக்கச் சொல்லி அன்னதானம் செய்யலாம். தவறாமல் மறுபடியும் வரவேண்டும் என்று அம்மையார் கேட்டுக் கொண்டார். 
துர்க்கையம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், நாகூர் ஆண்டவர் பெயரில் துணி ஒன்றை கட்டி வழிபாடு செய்யப்படும் ஓர் ஆலயம் ( இதனை எவ்வாறு குறிப்பிடுவது என்று தெரியவில்லை) எல்லாம் அருகருகே இருந்தன. 
அந்தப் பையன்கள் இன்னும் டமாரங்களைத் தட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பாட்டிக்குக் காது வலிக்கிறதாம். வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் வருகிறது என்கிறார்கள் பையன்கள். காது அடைக்கிறது என்கிறாள் பாட்டி. அந்த நாடகத்தின் அடுத்த காட்சியை  நாங்கள் அறிந்து கொள்வதற்குள் மையச்சாலை வந்துவிட்டது. 
என்னை விட்டால் உனக்கு எத்தனையோ பேர் மாப்பிள்ளைமார், 
உன்னை விட்டால் எனக்கு பெண் உண்டோ மனோன்மணியே! 


Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்