ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது
2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்
குப்பத்தில் ஒரு முடி திருத்தும் கடைக்குச் சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்
பொதுவாக சொல்லப்படுவதுண்டு.
கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.
அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.
2025 நவம்பர் 14.
பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்று நேற்றுத் தான் சொன்னார். அத்துடன் எல்லாம் முடிந்திருக்க வேண்டும். நேற்று கொடுத்த மாதுளை நன்றாக இருந்ததா என்று அவர் கேட்டிருக்க வேண்டாம். ஒரு பகுதி அழுகி இருந்தது என்று நானும் சொல்லியிருக்க வேண்டாம்.
மாதுளையே அப்படித்தான் என்று சொல்லிவிட்டார் நண்பர். அன்று பிளேடு பொட்டாலத்தை எடுத்து என் கையில் அழுத்தி வைத்த கிருஷ்ணமூர்த்தி போல!
2007, 2008 காலகட்டத்தில் இப்படி எழுதி இருந்ததாக நினைவு.
எனக்குப் பிடித்த
கன்னடப் பாடலை போட்டாய்,
காபி குடித்தாயா என்றும் கேட்டாய்.
நீ வியாபாரி இல்லை.
போன வாரம் உனக்கு வந்த காய்ச்சலை விசாரித்த போது
நானும் முதலாளியாக இல்லை.
பத்தே நிமிடங்களில்
நான் வாங்கி வந்து பிரிக்கப்படாத பிளேடை பதற்றத்துடன் எடுத்துக்காட்டிய போது
நான் பத்மநாபன் இல்லை,
புதிய பிளேடுகள் அடுக்கப்பட்ட பொட்டலத்தைக்
கோபமாக எடுத்து
என் கையில்
அழுத்தியபோது
நீயும்
கிருஷ்ணமூர்த்தியாக இல்லை!
வாழ்க்கையிலும் கவிதையிலும் பெரிதாக எதுவுமே மாறுவது இல்லையா என்ன?
Comments
Post a Comment