கையசைத்துச் செல்கிறது காலம்

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காலத்தில் வந்த தேர்தல் முடிவுகளையொட்டி ஜெயலலிதா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுவிட்டு வந்து நான் என் அப்பாவிடம் பரபரப்பாகக் கூறினேன். அப்பா வரட்டும்,வந்து ஆட்சி செய்து காட்டட்டும் ! என்று எரிந்து விழுந்தார். 
         அடுத்த தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிதான் ! என்று என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ சொன்னபோது எனக்கும் எரிச்சலாக இருந்தது என் அப்பாவைபோல!  அப்பாவின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா ‌ காலமாகிவிட்டார். அறிஞர் அண்ணா இறந்த நாளில் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு லாரியில் தொற்றி ஏறி ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் கேம்ப் என்ற ஊரிலிருந்து
சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலைப்  பார்த்துவிட்டுப் போன என்னுடைய அப்பாவைப்  பற்றி அலுவலகத்திலேயே சட்டையை கழற்றி விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அளவு மரபு வழிப்பட்ட என்னுடைய தாத்தா அறிந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்னைப் போலவும் என்னுடைய அப்பாவை போலவும் அவரும் எரிச்சலடைந்திருப்பாரா என்ன? 
   எங்கள் வீட்டில் மட்டுமல்ல, பக்கத்து வீடு, மேல்வீடு, எதிர்வீடு என எங்கிருந்தும் பிள்ளைகள் எழுந்து விஜய் விஜய் என்று கத்துகிறார்கள்.  ஒரு ஐபிஎல் போட்டி போல தேர்தலைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை விஜய் கட்சி தோற்றுப் போயிருந்தால் அடுத்த தேர்தலில் ஹிட் கொடுப்பார் என்று சொல்லவும்கூடும். 
   ஒரு முதலமைச்சரே தோற்றுப் போகும் அளவிற்கு தமிழ்நாட்டில் என்ன நடந்து விட்டது? உண்மையில்  ஒன்றுமே புரியவில்லை. 
        எதிர்பார்க்காதது நடக்கும் போது, விரும்பாதது நிகழும் போது கண்மூடிக் கொள்ளத் தோன்றினால் புரிந்து கொள்ளலாம் நமக்கு வயதாகிவிட்டது என்று! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்