தித்திக்கும் தருணங்கள்
ஆசிரியர் தீ . ந. ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே" நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது. உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்" செய்து நூலாக வெளியிடலாம்.
என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.
குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கடிகள் மிக்க தம்முடைய பணிச் சூழலுக்கு இடையே எனக்காக நேரம் கண்டுபிடித்து சமஸ்கிருதப் பகுதிகளைப் பார்வையிட்டு உதவும் எழுத்தாளர் பார்கவி அவர்களுக்கு நன்றி. என்னுடைய அன்பு மாணவி ஜெ. காமாட்சி காயத்ரி மொழிபெயர்ப்புப் பனுவலின் ஒவ்வோர் எழுத்தையும் கவனித்திருக்கிறார். காமாட்சியால் இந்தப் பணி இன்னும் இன்னும் இனிமை கொள்கிறது.
திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மற்றும் கன்னடத்துறை மாணவர்கள் பலர் இந்தப் பணியில் எனக்கு உதவியிருக்கிறார்கள். குல்பர்காவில் உள்ள கர்நாடக மத்தியப் பல்கலைக்கழக கன்னடத்துறை பேராசிரியர் நண்பர் பசவராஜ ஐயப்ப கோடகுண்டி அவர்கள் அரிதான கன்னட சொற்களுக்குப் பொருள் விளக்கி உதவியிருக்கிறார்கள். அவ்வாறே நண்பர்கள் பேராசிரியர் பி.எஸ்.சிவக்குமார், எம்.எஸ்.துர்காபிரவின் ஆகியோரும் ஆலோசனைகள் கூறுவதுண்டு. என் பணி என்பது இவர்களுடன் எல்லாம் தொடர்ந்து உரையாடலில் இருப்பது தான் .
இந்த முக்கியமான தருணத்தில் அம்மாவை நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய எழுத்து முயற்சிகள் போல அம்மாவை மகிழ்வுறச் செய்பவை வேறில்லை. என் யோக ஆசிரியர் குருஜி சௌந்தர் அவர்களை வணங்குகிறேன். அவருடைய மாணவனாக நான் பெற்றுக் கொண்டுவருவதை சொற்களில் விளக்க முடியாது, எல்லாவற்றையும் அவ்வளவு வெளிப்படையாக விளக்கிவிடவும் முடியாது, கூடாது!
பேராசிரியர்கள் அ. மோகன், க. கதிரவன், இரா. இராமன், இனிய பணிச் சூழலை எப்போதும் ஏற்படுத்தும் திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் என் அன்பு.
ஊதியம் கிடைப்பது நிர்வாகக் காரணங்களால் அவ்வப்போது தடைப்பட்டு விடுகிறது. இந்த மாதமும் தாமதம்தான் ஆனாலும் தீபாவளிப் பண்டிகைக்கு புத்தாடை வந்துவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத வழக்கமாக இந்த ஆண்டு குழந்தைகள் இணைய அங்காடியில் பட்டாசுகளை வாங்குகிறார்கள். எப்படி சமாளிக்கிறாள், தெரியாது. என் கவலை எல்லாம் எட்டாவது இயலை எப்படியாவது விரைந்து முடித்து நண்பர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்பதுதான். அன்னையென, தோழி என ஆயிரம் முகம் கொண்டு அரங்கு நிறைக்கிறது அணங்கு.
என் எழுத்துகளை படிப்பதில்லை, உரைகளை கேட்பதில்லை என்பது இவளுடைய தீர்மானம். இன்னும் இன்னும் வெல்லட்டும் (தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உயிர்களின் உரிமையை மறுக்கக்கூடாது அல்லவா) ,
இல்லத்தில் நீ மகிழ்ந்திருக்க வேண்டும், நீ உன் உலகில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்.
என் பொருட்டு இவளை அனுப்பி வைத்த அந்த ஒன்று என் ஆராதனையை ஏற்றுக் கொள்ளட்டும் என்றென்றும்.
இணைப்புகள் கீழே
இந்தியக் கவிதையியல்-7:முதன்மைச் சிந்தனைகள், தீ.ந.ஶ்ரீ.கண்டய்யா
Comments
Post a Comment