பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்களுக்கு அஞ்சலி
திராவிடப் பல்கலைக்கழக மேல் நாள் துணை வேந்தர் பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள் அமெரிக்காவில் மறைந்தார் என்னும் செய்தி கிடைத்தது. 2005 முதல் 2008 வரை திராவிட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள். அவருடைய காலகட்டத்தில் தான் எனக்கு பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. நான் கன்னடத்தில் இருந்து மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டும் என்று என்னை அவர் அதிகம் ஊக்கப்படுத்தினார். அம்மாவிற்கு சிறந்த பெண்மணி என்று நம் பல்கலைக்கழகத்தின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்தார்கள். பல்கலைக்கழகம் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த விழா மலரில் அம்மாவின் பெயர் புகைப்படத்துடன் நிரந்தரமாக இடம்பெறும் படி செய்தார்கள். என் தனி வாழ்வில் நான் சந்தித்த நெருக்கடிகளின் போது குடும்பப் பெரியவர் போல ஆலோசனைகள் வழங்கியதுண்டு.
இவையெல்லாம் அவர் பற்றிய இனிய நினைவுகள்.
துறை தொடர்பான கலந்தாய்வு கூட்டங்களில் அவருடைய இன்னொரு முகம் வெளிப்படுவதைக் கண்டு வியந்ததுண்டு.
எஸ் எல் பைரப்பாவின் பர்வா நாவலை கன்னட மொழியிலிருந்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தமைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். ஒப்பிலக்கியத் துறையில் ஈடுபாடு மிக்கவர்.
துணைவேந்தர் நிலையிலிருந்துஓய்வு பெற்ற பிறகும் பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்களுடன் பேசுவதுண்டு.
1899 ஆம் ஆண்டு கன்னட மொழியில் எழுதப்பட்ட இந்திரா பாய் என்ற நாவலை நான் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்தப் பணி என்றேனும் நிறைவடையும் என்றால் அதற்கு பேராசிரியர் ஜி லட்சுமி நாராயணா அவர்களும், மோ என்று அறியப்படும் மோகன் பிரசாத் என்ற தெலுங்கு மொழிக் கவிஞரும் முதன்மையான காரணங்கள் ஆவர். இருவருமே தற்போது இல்லை. என்றேனும் அந்தப் பணி நிறைவுற்று புத்தகம் வெளிவரும்போது பேராசிரியர் என்னை ஆசீர்வதிக்கக்கூடும்.
எங்கள் அன்பையும் வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் சார்.
Comments
Post a Comment