இங்கிருந்து அங்கு பார்க்க இரண்டு சாளரங்கள்
தாம் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு நாடோடி போல் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்த அனுபவங்களை எழுத்தாளர் ஜெயமோகன் புறப்பாடு என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
வீட்டில் கோபித்துக் கொண்டு நாகர்கோயிலில் இருந்த மாணவர் விடுதியில் தங்கியிருக்கிறார். கட்டடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். தாம் ஓர் அருட்தந்தையாக வேண்டும் என்று நினைக்கும் அருள், எளிய சுமை தூக்கும் பணிகளை மேற்கொள்ளும் நாகமணி போன்ற பல்வேறு நண்பர்கள் வேறுபட்ட குண இயல்புகளுடன் அந்த விடுதியில் இருக்கிறார்கள். ஜான் எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருக்கிறான். ஆங்கிலம் பேசத் தெரியாமல் கல்லூரியில் மாரிமுத்து தவிக்கிறான். ஒரு அடிதடித் தகராறில் நாகமணிக்காக உதவச் செல்லும் ஜெயமோகனையும் ஆபத்து சூழ்ந்துகொள்கிறது. கடைசியாக அவருடைய அண்ணன் வந்து ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
இவ்வாறு முதல் பகுதி நிறைவடைகிறது
உயிர் நண்பன் ராதாகிருஷ்ணன் பற்றிய விவரிப்புகள் புறப்பாடு நூலில் மிக விரிவாக இடம் பெற்றுள்ளன. ராணுவத்தில் சேர முடியவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் ராதாகிருஷ்ணனின் இறப்பு ஜெயமோகனை அதிகம் பாதித்து விடுகிறது.. இந்த அனுபவம் பற்றி வெவ்வேறு இடங்களில் ஜெ எழுதியும் இருக்கிறார். வீட்டிலிருந்து வெளியேறி இந்தியா முழுவதும் நாடோடியாக அலைகிறார். மகாராஷ்டிரத்தில் கட்டிடத்தொழிலாளி, மும்பையில் கடை ஊழியர் இப்படி பல்வேறு வேலைகள். காசியில் தாந்த்ரீக வழிபாடு சிலவற்றை செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு மலையாளக் குடும்பத்தில் ஜெ இணைந்து கொள்கிறார். பிறகு அங்கிருந்தும் வெளியேறி ஜம்முதாபி ட்ரெயின் பிடித்து தமிழகம் வரும் விவரிப்பு. ஜோலார்பேட்டையில் இறங்கி அங்கிருந்து சென்னை. சென்னையில் வெவ்வேறு அச்சகங்களில் வேலை. சென்னையின் பல்வேறு இடங்களில் அலையும் வாழ்க்கை. இரவுகளில் பெருச்சாளி பிடிக்கும் நரிக்குறவர்கள்.
கூவத்தை ஒட்டிய குடிசைப் பகுதிகளில் கொசுக்கள் மொய்க்க வெளியே படுத்து உறங்கும் சென்னைவாசிகள். ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்க அதற்கு மிகப் பக்கத்தில் ஒரு பெரிய பன்றி நடந்து செல்கிறது. சென்னையில் அப்போது திரையிடப்படும் ஆங்கில சினிமாக்கள் மட்டும் தான் ஜெ அவர்களுக்கு தற்காலிக விடுதலையாக இருக்கின்றன. பசவராஜ் என்பவரின் அச்சகத்தில் வேலை செய்யும் போது மாரியம்மாளைப் பார்க்கிறார்
காரணமே இல்லாமல் எல்லோர் மீதும் கசப்பை ,வெறுப்பை உமிழும் சுபாவம் மாரியம்மாளுக்கு.
வென்முரசு நாவலில் சகாதேவன் மனைவியாகிய விஜயை என்ற இளவரசியின் ஏவல் பெண்டாக இருக்கும் ஒருத்தியிடமும் இப்படிப்பட்ட காரணமே இல்லாத நிரந்தரக் கசப்பு இருக்கிறது. . அவள் பெயர் நினைவில்லை.
இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து விட்டு
கடைசியாக ஊருக்கு வரும் ஜெயமோகனுக்கு அவருடைய சித்தப்பா அறிவுரை சொல்லி உலகியலில் தொடர்ந்து அவரை நிலைநிறுத்த முயல்கிறார். ஜெயமோகன் சித்தப்பாவுக்கும் அவருடைய அப்பாவுக்கும் இருக்கும் உறவு விந்தையானது. அவர்கள் பெரும்பாலும் பேசிக் கொள்வதில்லை. தன் தம்பி வீட்டுக்கு வரும்போது கூட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அப்பா வீட்டை விட்டு இறங்கி தோட்டப்பகுதிக்குச்சென்று நின்று விடுவது வழக்கம். ஆனாலும் அண்ணனின் விழிகள் தம்பியை எப்போதும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறே அண்ணனின் ஒவ்வொரு அசைவும் தம்பியால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு புறப்பாடு விளக்குகிறது.
வென்முரசு நாவலில் துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் இருக்கும் உறவும் இப்படித்தான். துரியோதனன் உறங்கும் போது கூட துச்சாதனன் அறை தூக்க நிலையில் அண்ணனை த் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பதாக வெண்முரசு நாவலில் பார்க்கலாம்.
. மாரியம்மாளிடமிருந்து விஜையையின் ஏவல் பெண்டுக்கும் ஜெயமோகனின் சித்தப்பாவிடமிருந்து துச்சாதனனுக்கும் ஒரு கோடு போடலாம் படைப்பாளி பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு படைப்பைப் புரிந்து கொள்ள முயல்வது பற்றிய விவாதங்கள் நிறையவே நடைபெற்றிருக்கின்றன. அவற்றின் சரிதவறுகளுக்கு நான் செல்லவில்லை
ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து வாசிக்கும் போது
அவர் படைப்பு தொடர்பான சில புதிய திறப்புகளுமளும் அமையும் என்பதை வலியுறுத்தவே இந்த குறிப்புகள்.
Comments
Post a Comment