அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மோகன் கூப்பிட்டு அதைக் கூறியபோது அதிர்ச்சி, எரிச்சல், துக்கம் ,ஏமாற்றம் எல்லாமும் ஆக இருந்தது.
திங்கட்கிழமை காலை அவர் விளையாட்டாக என்னுடன் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். இது உண்மை என்றால் வியாழக்கிழமை அவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளத்தான் விருப்பமில்லை. நம் விருப்பமெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வேறு கதை.
செய்யாறு கல்லூரியில் அவர் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் காலத்திலிருந்தேஅறிமுகம் உண்டு என்றாலும், அப்பா இல்லாமல் அழுத என் அன்புத் தங்கை உமாவுக்கு (பேராசிரர் அ மோகன் அவர்களின் மனைவி) அவர் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்ததை அறிந்த போது தான் அவர் மீது எனக்கு இன்னும் அன்பும் மதிப்பும் அதிகரித்தது. சம்பிரதாயத்துக்காக ஒரு முறை மட்டும் அது கொடுக்கப்படவில்லை. அண்ணனுடைய சீர் உமாவை வந்து சேர்வது வருடம் தோறும் நிகழும் ஒரு வழக்கமாக இருந்தது. .
நண்பர் ஒருவரின் முனைவர்ப் பட்டம் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொள்ள அமைந்தது. இயல்பாகவே சிலருடன் மனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. எனக்கு அப்படி ஒரு அந்தரங்கமான நெருக்கம் அண்ணனுடன் அமைந்தது.
தனி வாழ்வில் அவருக்கு நிறைய ஏமாற்றங்கள். குடும்ப வாழ்வில் பின்னடைவுகள்.
பொதுவாக இப்படிப்பட்டவர்களிடம் இயல்பாகவே அதிகமாக இருக்கும் பதற்றமும் படபடப்பும் எதிர்மறை நோக்கும் அவரிடம் மீச்சிறு துளியும் இல்லை. அந்த ஆலமரத்தில் கூடடடைந்த பறவைகள் அதிகம். செய்யாறில் இருக்கும் அவருடைய இல்லம் எத்தனையோ மாணவர்கள் நம்பிக்கையுடன் கைதொழும் ஆலயம்.!
நம் திராவிட பல்கலைக்கழக பாஷா பவன் வளாகத்தின் நுழைவாயிலில் தான் அவரை கடைசியாகச் சந்தித்தேன். முனைவர்ப் பட்ட மாணவர், நண்பர் செல்வகுமார் உடன் இருந்தார். மதிய உணவுக்கு நண்பர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவசரப்பட்டார். அன்று அப்பாவின் நினைவு நாள் என்பதால் நான் உணவைத் தவிர்த்து விட்டேன். இப்போதுதான் தெரிகிறது அவருக்கு இன்னும் கூட சில அவசரங்கள் இருந்தன என்று.
மாரிமுத்து அண்ணன் வாங்கிக் கொடுத்த இனிப்பு துண்டு கூட எஞ்சியிருக்கிறது. ஆனால் அதை அறிந்து கொள்ளத்தான் அவர் இல்லை .
தீவிர மாரடைப்பு என்கிறார்கள்.
அது சரி அப்படி என்ன எல்லாவற்றிலும் அவசரம் மாரிமுத்து அண்ணா?
Comments
Post a Comment