நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்
இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்!
விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின் வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள்.
. அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்.. நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது.
இதற்காக அவர் செலவிடும் நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன். சுமார் பத்து லட்சம் பக்கங்களை சக்திவேல் இதுவரை ஸ்கேன் செய்திருப்பதற்காக இந்து தமிழ் திசை நாளிதழ் அவரைப் பாராட்டியிருக்கிறது. .
இது தொடர்பாக பேசும் சக்திவேல் இப்போதுதான் அரசின் அக்கறை பார்வையற்றவர்களின் வாசிப்பு பழக்கத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி திரும்பியிருக்கிறது. அரசு இந்த விஷயத்தில் இன்னும் உதவி புரிய வேண்டும் . என்கிறார்.
ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திலும் ஒரு ஸ்கேன் கருவி வைக்கப்பட வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. . இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை. . ஆனால் ஒரு நூல் அச்சிடப்படும் போதே அது பார்வையற்றவர்களுக்கும் பயன்படுமாறு மின்படியாக்கமும் நிகழும் வண்ணம் அரசு ஆணையிட்டுக் கண்காணிக்க வேண்டும். இது ஒன்றும் கடினமான பணியல்ல. நூல்கள் முறைகேடாக சுற்றுக்கு விடப்படும் என்ற பதிப்பகங்களின் கவலையும் நியாயமானது தான். ஆனால் அப்படி முறைகேடாக இணையத்தில் சுற்றுக்கு விடப்படும் நூல்கள் பெரும்பாலும் வாசிக்கப்படுவதே இல்லை என்பதே நிதர்சனம். அமெரிக்காவில் இது தொடர்பான சட்டங்கள் இருக்கின்றன என்பதாக அறிகிறேன். Book share , என்ற இணைய நூலகம் என்னைப் போன்ற பார்வையற்ற வாசகர்களின் சொர்க்கம். . அரசின் ஆக்கப்பூர்வமான தொடர் நடவடிக்கைகள் இந்த விஷயம் தொடர்பாக விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்.
மின் நூல்களாக மாற்றப்படும் புத்தகங்களை எந்த நிலையிலும் சட்டவிரோத முறையில் விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையில் விரல் மொழியர் குழுவின் உறுப்பினர்களாகிய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதுமட்டுமல்ல அவ்வாறு இருக்கும் எங்கள் உறுதியை நிறுவும் வண்ணம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவர்களை குழுவில் இருந்து வெளியேற்றவும் செய்கிறோம்.
நாளை தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியடைய இந்த முயற்சிகள் எளியவையாய் சாதாரணமானவையாய் தோன்றவும் கூடும். ஆனால் வாசிப்பு, எழுத்து என்னும் அறிவுச் செயல்பாடுகளில் பார்வையற்றவர்களின் பங்களிப்பை மதிப்பிடும் போது சக்திவேல் உள்ளிட்ட விரல் மொழியர் நண்பர்களின் பெயர்கள் மின்னும் நட்சத்திரங்களாய் என்றும் இடம்பெறும்.
நண்பர் பொன் சக்திவேல் அவர்களுக்கும் மற்ற விரல் மொழியர் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! .
வாழ்த்து என்பது என்றும் வாழ்த்துதான். தாமதமாகச் சொன்னால் தான் என்ன!
Comments
Post a Comment