தொடங்கி விட்டேன்
அம்மா பற்றி நினைவுகளை ஒரு நூலாக எழுத வேண்டும் என்று நண்பர் க. ஜவகர் கேட்டுக்கொண்டார். எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது. நண்பர் ஜவகரின் சொற்கள் அந்த எண்ணத்திற்கு மேலும் உத்வேகம் கொடுத்தன. அம்மாவின் வாழ்க்கை ஏன் முக்கியம்? இரண்டு ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்க அவள் மேற்கொண்ட சலிப்பில்லாத முயற்சிக்காக தனக்குள் இருக்கும் ஒளியை கடைசி வரை தக்க வைத்துக்கொண்ட சாதனைக்காக ஆர்வம் மிக்க மாணவியாகத் தன்னை அவள் முன்வைத்த இயல்புக்காக.
நான் பிறந்தது பரமக்குடியில். அம்மா பற்றிய நினைவுகளை பரமக்குடி, சென்னை, குப்பம் ஆகிய மூன்று ஊர்களை மையமிட்டு எழுதும் திட்டம். அவளின் இளமை வாழ்வை, குழந்தைமையை அறிந்து கொள்ள அவளை விட வயதில் பெரிய அத்தையிடமும் என் சித்தியிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
என் அலைபேசியில் இருக்கும் கீப் நோட்ஸ் செயலியில் குரல் வழியே தட்டச்சு செய்த பிறகு கணினியில் எடிட் செய்யும் எண்ணம்.
அம்மா பற்றிய பரமக்குடி நினைவுகளை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருக்கிறேன். இதுவரை 26 பக்கங்கள் வந்திருக்கின்றன. இதன்பிறகு சென்னை மற்றும் குப்பம் நினைவுகள் இடையிடையே அவளின் திருமணத்திற்கு முற்பட்ட நிகழ்வுகள். 100 பக்கங்களுக்கு மேல் எழுதும் திட்டம்.
நண்பர் க. ஜவகருக்கு நன்றி.
நண்பர்களே! தொடங்கி விட்டேன், இதை உங்களிடம் சொல்வதற்கு காரணம் எப்போது முடிப்பீர்கள் என்று நீங்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்டால் தான் நான் என்றேனும் இதனை முடிப்பேன்!
செய்வீர்களா?: நீங்கள் செய்வீர்களா?;
Comments
Post a Comment