காக்கை குருவி எங்கள் ஜாதி

இன்று மாலை அது நடந்தது. வீட்டு வாசல் படித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது மிகவும் சாதுவான நாய் . யாராவது புதியவர் வந்துவிட்டால் குறைத்துக் கொண்டே பயந்தபடி பின்னால் செல்லும் அளவுக்குச் சாதுவான நாய் தான்.  நாங்கள் அறிந்து  அது எந்த அத்துமீறலிலும் நடந்தது கிடையாது. அப்படி இருக்க ஒரு சேவலை கவ்விப் பிடித்துவிட்டது.  
வீட்டு வாசலில்  வண்டியில் வளையல் விற்றுக் கொண்டிருந்தவர் வந்து விலக்கி விட்டார். பக்கத்து வீட்டுப் பையனும் நாயிடமிருந்து சேவலை விலக்கி விட உதவினான். பயந்து போய் வீட்டுக்கு  எதிரில் உள்ள ஒரு புதரில் சேவல் ஒளிந்து கொண்டு விட்டது. கொஞ்ச நேரம் கழித்து அதன் உரிமையாளர்கள் வந்து  தூக்கிக் கொண்டு சென்றார்கள். அப்போது சேவல் பலமாகக் கூவியது. 
மூன்று சத்தங்கள். 
நாய் சேவலைக் கவ்வியத் தருணத்தில் சுமார் 25 காக்கைகள் ஒன்று சேர்ந்து சத்தமிடத் துவங்கிவிட்டன. ஓயவே இல்லை.  சிறிது நேரம் கழித்து சத்தம் இன்னும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் காக்கைச் சத்தம்.  இப்படி மூன்று முறை காக்கைகளின் உச்சகட்ட ஒலி. 
முதல் முறை காக்கைகள் கரைந்தது  நாய் மீதான கண்டனம். காரணம் அப்படி ஒரு வேட்டை இதுவரை எங்கள் தெருவில் நடந்ததே கிடையாது. அதனால்தான் அந்தக் கண்டனம். 
இரண்டாவது பெரும் சத்தம் புதரில் மறைந்திருக்கும் சேவலுக்கு  ஆறுதல் என்பதாகப்  பொருள் படுகிறது. அப்படி என்றால் மூன்றாவது முறை எழுந்த பெரும் சத்தத்துக்கு என்ன காரணம்? 
சேவலை பொறுப்பாக பார்த்துக் கொள்ளவில்லை என்பதற்காக அது  எழுந்ததா என்ன? 
எப்படியும் இருக்கட்டும், 
நான் மனிதன்! நான் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை அறிந்து கொண்டிருக்கிறேன் என்னும் எண்ணம் எந்த அளவுக்குச் சரியானது? 
வானில் பறக்கும் புள்ளெல்லாம் நான்! 
நான் இருக்கிறேன்!   அந்த நாய், இந்தச் சேவல், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் காக்கை என யாதுமாகவும்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்