மண் மடிப்புகளுக்கு இடையே

பென்யமின் மலையாளத்தில் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவல் தமிழில் எஸ். ராமன் என்பவரால்  மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது.   ஆடு ஜீவிதம் நாம் கற்பனையும் செய்திருக்காத பாலைவன வாழ்க்கையை விவரிக்கும் நாவல். 
ஒரு தமிழ் மாணவனாக நான் அறிந்ததெல்லாம் பாலை நிலம் மட்டும்தான்.  நமக்கு பாலை என்பது வறண்ட மலையும் காடும் தான். உண்மையில் பாலைவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பெரும்பாலும் இல்லை , எனலாம். 
பாலை குறித்த விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவவரி என்ற பெயரில் பாலை நில வாழ்க்கையை முன் வைக்கிறது. வெண்முரசில் பாலை குறித்து விரிவாக வாசித்ததுண்டு. எழுத்தாளர் செல்வேந்திரன் பாலை நிலப் பயணம் என்று ஒரு பயண நூல் எழுதி இருக்கிறார். பாலை நிலம்/வனம் குறித்த என் வாசிப்பு இவ்வளவு தான் 
இந்த வரிசையில் ஆடு ஜீவிதம் குறித்த மதிப்பீடு இது. பாலைவனம் குறித்த மிக விரிவான சித்திரத்தை வழங்கும் நாவல்  ஆடு ஜீவிதம் 
அரேபியாவில் ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை என்று சொல்லி நசீபு அழைத்துச் செல்லப்படுகிறான். தான் துபாயில் இறங்கியவுடன் தன்னை வரவேற்க ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துச்செல்லும் அவனுக்கும் அவனுடைய நண்பனுக்கும் கடும் வாழ்க்கை நெருக்கடிகள் காத்திருக்கின்றன. 
 அபாபு  ( காவலன்)  என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மேய்ப்பவனால் அவர்கள் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.  பாலைவனத்தில் ஆட்டுக்கிடையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் வார்த்தைகளால் விளக்க முடியாத சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம்  கிடையாது. , உலகத்துடன் அவர்கள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. பொழுது விடிந்தது முதல்,  இரவு வரை பாலைவனத்தில் வேலை செய்ய வேண்டும். தப்பிச்செல்ல முடியாது. பைனாக்குலரையும்,  துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு அபாபு எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பான்.  வாரம் ஒரு முறை வரும் தண்ணீர் வண்டியும், மாதம் ஒருமுறை வரும் புல்லுக்கட்டு வாகனமும் ,  ஆடுகளை கசாப்புக்கு கொண்டு போக அவ்வப்போது  வரும் வாகனமும் தான் அவர்களுக்கு உலகம் என்று ஒன்று இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகின்றன. 
நாள் முழுக்க வேலை செய்தால் அவர்களுக்கு சாப்பிட கிடைக்கும். "அவர்கள் என்று சொல்வதால்" நசிபும் அவனுடைய மலையாள நண்பனும் சேர்ந்தே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவன் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறான் என்று இவனுக்கும் இவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது அவனுக்கும் கூட தெரியாது. 
 அபாபு பேசுவதைவிட அவனுடைய பெல்ட் பேசுவது அதிகம். 
பாலைவனம் என்றால் கடும் வெப்பம் ஒருபுறம், மிக அரிதாகப்பெய்யும் மழை, குளிர், என விரிவான பருவநிலை சித்தரிப்பு நாவலில் உள்ளது. ஆடு ஒட்டகம் மட்டுமின்றி விதவிதமான பாம்புகள் சிலந்திகள் ஓணான்கள் என பாலைவனம் வேறுபட்ட உயிர் வெளியாக நாவலில்   தெரிகிறது. 
மூன்று வருட பாலைவன சித்திரவதைக்குப்பிறகு நசீபு தன்னுடைய மலையாள நண்பனுடனும் அவனுக்காக அல்லாஹ்வின் தூதுவன் போல் வந்திருக்கும் காதிரி என்னும் சூடானிய நண்பனுடனும் தப்பிச்செல்லும் காட்சி மிகப் பெரிய வாசிப்பு அனுபவம். ஆயிரக்கணக்கான பாம்புகள் எதிரில்  ஒட்டுமொத்தமாக வரும் போது நசீபும் நண்பர்களும் மணலில் தலைமறைய படுத்துக்கொள்ள அவர்கள் மேல் பாம்புகள் ஊர்ந்து செல்லும் அனுபவத்தைப்பெற நீங்கள் நாவலைத்தான் வாசிக்கவேண்டும். 
 ஓர் இஸ்லாமியனுக்கு அல்லாஹ் மீது இருக்கும் பற்றை அவ்வளவு சுலபமாக விளக்க முடியும் என்று ‌ நான் நினைக்கவில்லை. ஓர் பேரிருப்பின் மீது அமைந்த அசைக்க இயலா பற்றாக,, எந்த வினாவிற்கும் அப்பாற்பட்ட  ஓர் அறிதலாக, அதனை என் அளவில் புரிந்து கொள்ள முயல்கிறேன்.  நம் தக்கங்களுக்கும் கற்பனைகளுக்கும் அங்கு இடமில்லை. 
அப்படிப்பட்ட ஓர் பேரிருப்பை நசீபு காதிரி என்ற சூடானிய நண்பனின் வாயிலாகவும்,  பல நாள் போராட்டத்திற்குப் பிறகு சாலையை அடையும் அவனை காரில் ஏற்றிக்கொண்டு நகரச் சந்தையில் கொண்டு போய் விடும் ஓர் அராபிய கனவான் வாயிலாகவும், அவனைத் தூய்மைப்படுத்தி மருந்து கொடுத்து இறுதியில் இந்தியாவிற்கு வர ஏற்பாடு செய்யும் மலையாளி வாயிலாகவும் அறிகிறான்.. 
நாம் கனவிலும் நினைத்திருக்காத இடங்களில், கற்பனையும் செய்ய விரும்பாத சூழ்நிலையில், வாழ்க்கை நடக்கிறது. எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை மழைக்காக பாலைவனத்தில் காத்திருக்கும் கள்ளிச்செடி போல மனிதர்கள் இடையே துலிர்த்திருக்கிறது என்பதையும் அறிய இந்த நாவலை வாசிக்க வேண்டும். 
நம்பிக்கை என்பது ஒரு தெரிவு என்று நேர்மறை உளவியல் (positive psychology)   நூல்களில் கூறப்படுவதுண்டு. இந்த நாவலில் அது உறுதிப்படுகிறது. நம்பிக்கை என்ற ஒன்றை உறுதியாக பற்றி கொண்டிருப்பதால் தான் காதிரி நசீபுக்கு இறுதி வரை துணை இருக்கிறான். அந்தத் தெரிவை இடையே கைவிட்டதால் தான் மலையாள நண்பன் பாலைவன மணலை அள்ளித் தின்று இறந்து போகிறான். நாம் காதிரியை போல் நசீபைப்போல் நம்பிக்கை என்ற தெரிவை தொடர்ந்து  தக்க வைத்துக் கொள்வோம். 
இந்த நாவல்  குறித்து ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு அவ்வளவு உயர்வான விமர்சனம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவருடைய இணையதளத்தில் இந்த நாவல் பற்றிய மதிப்பீட்டுக் குறிப்பை வாசித்த நினைவு இல்லை என்றாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் நாவல் மீதான தம்முடைய நிறைவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கான காரணத்தை நான் தேடிப் பார்க்கிறேன். 
நாவல் முழுவதும் பாதிக்கப்பட்ட நசிபின் பார்வையிலிருந்து  விரிகிறது. அவனை ஆட்டுப்பட்டி யில் அடைத்து வைத்திருக்கும் அந்த அரபிய எஜமானனின் தரப்பு நாவலில் வெளிப்படவில்லை என்பதற்காக  ஜெ அவர்களால் நாவல் நிராகரிக்கப்படுகிறதா என்ன, தெரியவில்லை.  நசீபு போன்றவர்களுக்கு என்றேனும் விடுதலை கிடைக்கலாம், ஆனால் அவர்களை அடைத்து வைத்து எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அபாபுகளுக்கு விடுதலை என்பதே ‌ அமையப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் வளர்ந்து விரைவில் கசாப்பு கடைக்கு போகும் ஆடுகளை விடவும் அபாபுகள் பாவம் இல்லையா?  அவர்கள் இருப்பது நிரந்தரமான ஒரு திறந்தவெளி சிறையில் என்று நாவலை வாசித்து முடித்தவுடன் தோன்றியது. 

வேறுபட்ட வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் மூலமாக பெற விரும்புபவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய நாவல்களின் பட்டியலில் எழுத்தாளர் பென்யமீன் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலும் இடம்பெறும்.  ஆடு ஜீவிதம் மலையாளத்தில் சாகித்ய அகடமி விருது பெற்றிருக்கிறது..

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்