அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்

புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது 
. அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு. 
சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை‌ வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை. 
என்னுடைய நண்பர்  முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம். 
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தினர் அமரும் பெட்டியில் நிகழ்ந்த ஒரு நீண்ட பயணம் அது. வெகு நேரம் நண்பரை பரிசோதித்து விட்டு சில பெரிய குளிகைகளையும் வெவ்வேறு ஆயுர்வேத மாத்திரைகளையும் வழங்கினார். 
நண்பருக்கு போதுமான அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இரண்டு அல்லது மூன்றாவது  சந்திப்பில் இதனை அவரிடம் தெரிவிக்க, இன்னும் ஒரே ஒரு மாதம் மட்டும் நீங்கள் மருந்து சாப்பிட வேண்டும். அதன் பிறகும் முன்னேற்றம் இல்லை என்றால் நீங்கள் மருந்துகளை நிறுத்தி விடலாம் என்று கூறிவிட்டார். 
இப்படிப்பட்ட  மனநிலை நவீன காலத்தில் எத்தனை மருத்துவர்களுக்கு அமையும்? 
என்னுடைய உறவினர்கள் இருவர் மருத்துவரிடம்  சிகிழ்ச்சை எடுத்துக் கொண்டார்கள். தரிசனம்கோப்பு மருத்துவமனையில் டாக்டர் மகாதேவன் அவர்களைச் சந்திக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து எல்லாம் நோயாளிகள் வருவதைப் பற்றி அவர்கள் என்னிடம் சொன்னது உண்டு. 
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் டாக்டர் மகாதேவன் அவர்களை மேற்கொண்ட விரிவான நேர்காணல் நூலாக கிண்டிலில் கிடைக்கிறது. 
அறிவோம் ஆயுர்வேதம் என்றும், ஆசாரக் கோவைக்கு ஆயுர்வேதம் சார்ந்தும் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. 
ஆயுர்வேதத்தை நவீனப்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்துக்காக, அதன் பொருட்டு மருத்துவர் மேற்கொண்ட அயராத பணிகளுக்காக, எழுதிய நூல்களுக்காக, இளைய மருத்துவர்கள் சூழ இருக்க அவரிடம் வெளிப்படும் கம்பீரத்துக்காக, என்னைப் போன்ற எத்தனையோ பேரிடம் அவர் பல நிலைகளில் வெளிப்படுத்திய கருணைக்காக என் வணக்கங்கள். 
மருத்துவருக்கு அஞ்சலி! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்