துஞ்சுபுலி இடறிய சிதடன்போல
அறிவே துணை என்ற பெயரில் கோவையில் ஓர் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை ஞானி அவர்களின் நண்பரும் பார்வையற்ற பேராசிரியர்களில் முதன்மையான ஆளுமையும் ஆகிய பேராசிரியர் சுகுமாரன் அவர்களின் முன்னெடுப்பு. தொடக்க விழாவுக்கு பேராசிரியர் என்னையும் அழைத்திருந்தார். நான் மார்ச் 1 வெள்ளிக்கிழமை இரவே கோவை சென்று விட்டேன். நான் தங்கி இருந்த அறைக்கு அடுத்த நாள் காலை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் நண்பர் க. ஜவகர் விக்னேஷ் என்றஅவருடைய மாணவருடன் வந்திருந்தார்.
காலை சுமார் 10:30 மணி அளவில் கோவை அரசு கலைக் கல்லூரியில் விழா தொடங்கியது. கோவை விஜயா பதிப்பக நிருவனர் ஐயா வேலாயுதம் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஐயா வேலாயுதம் அவர்கள் பேராசிரியர் சுகுமாரன் அவர்களுக்கு எந்த உதவி எப்போது தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக மேடையில் அறிவித்தார். ஆய்வு மைய பெயர்ப்பலகையை ஐயா அவர்கள் திறந்து வைக்க நாங்கள் எல்லோரும் உடன் இருந்தோம்.
ஆய்வு மையத்தின் நோக்கங்களை பேராசிரியர் சுகுமாரன் அவர்கள் சிறப்பாக விளக்கினார். அவருடைய உரை மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி பார்வைத்திறன் குறையு உடையவர்கள் வரலாற்றுக்குச் செய்த பங்களிப்புகளை எடுத்துரைப்பதாக இருந்தது. இரண்டாவது பகுதி அறிவே துணை ஆய்வு மையத்தின் நோக்கங்களை எடுத்துரைப்பதாகவும் மூன்றாவது பகுதி கோவையைக் களமாகக் கொண்டு ஆய்வு மையம் முதலாவதாக சிறிய அளவில் சில திட்டங்களை முன்னெடுக்க இருப்பதை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தன. .
பேராசிரியரின் கருத்துக்களை பெரும்பாலும் அவ்வாறே வழி மொழிவதாக என்னுடைய உரை அமைந்தது.
தூங்கும் குடியை காலால் இடறிய பார்வையற்றவன் போல என்று பொருள் தரும்
துஞ்சுப்புலி இடறிய சிதடன் போல
என்ற புறநானூற்று அடியை நான் பார்வையற்றவர் நோக்கு நிலையிலிருந்து வாசித்தேன். அறிவு பற்றிய திருவள்ளுவர் கருத்துக்களை மூன்று குறட்பாக்களைக் கொண்டு விளக்கினேன்.
உரை நன்றாக இருந்ததாக மேடையில் உடன் இருந்தவர்கள் சொன்னார்கள். அது உண்மை என்று எனக்கே தோன்றியது.
எனக்கு மதியம் ஒரு மணி 45 நிமிடங்களில் பேருந்து முன் பதிவாகி இருந்ததால் என்னால் நிகழ்ச்சி முழுவதும் இருந்து பங்கேற்க இயலவில்லை. நண்பர் ஜவகரின் உரையை கேட்க முடியாமல் போனது இழப்புதான்.
பேராசிரியர் சுகுமாரன் அவர்களின் பேத்தி அரங்கில் ஓடி திரிந்ததும் வடை வேண்டுமென்று சண்டை போட்டு வாங்கிக் கொண்டதும் அன்றைய ஆனந்தங்கள். பேராசிரியரின் மகள் பெயர் அனிதா
தாம் ஒரு வரலாற்று மாணவர் என்பதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மகள் பெயராகிய அனிதா என்பதைத் தம்முடைய மகளுக்குச் சூட்டி இருப்பதாக பேராசிரியர் சுகுமாரன் மேடையில் பகிர்ந்து கொண்டார். பேராசிரியரின் மாப்பிள்ளை தான் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து என்னை வழி அனுப்பி வைத்தார். பார்வையற்ற சமூகத்தைச் சார்ந்த ஒருவனுக்கு அவனுடைய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றக் கிடைத்த வாய்ப்புகளுள் ஒன்றாக நான் இந்த தொடக்க விழாவில் பங்கேற்க அமைந்த வாய்ப்பினைக் கருதுகிறேன். பேராசிரியருடன் இணைந்து பணியாற்றும் நல் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்.
நன்றே நிகழ்க!!
Comments
Post a Comment