என்னுடைய உரை

சுந்தரகாண்டத்தின் பிணிவீட்டுப் படலம் குறித்த என்னுடைய உரை மார்ச் 22   அன்று  கிளப் ஹவுஸ் செயலி வாயிலாக நடைபெற்றது. பிணிவீட்டுப் படலத்தை தொகுத்துரைக்க அதில் இடம்பெற்றுள்ள பல வகை நாடகியத்  தருணங்களை அறிய முடிந்தது.  பிணிவீட்டுப் படலம் என்பதற்கு அரக்கர்கள் அரக்கத் தன்மை என்ற பிணியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்குக் காரணமான படலம், அரக்கர்கள் அரக்கத் தன்மையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபடக் காரணமாக அமையும் படலம், இலங்கையின் கட்டுக்கோப்பு என்ற பிணிப்பு அனுமனால் நிரந்தரமாகக் கலைக்கப்படும் படலம் என்ற வெவ்வேறு விளக்கங்களை நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலின் வழி அடைய முடிந்தது. அனுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகளை காப்பியத்தில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு அறிவுரைப் பகுதிகளுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடிந்தது. ஒருவருக்கு நாம் அறிவுரை கூறும் போது இருவருக்கும் இடையில் திகழும் உறவு நிலைக்கேற்ப அந்த அறிவுரைகளில் சொற்கள் அமையும். அந்த வகையில் மாறிசன் அறிவுரையில் இரத்த உறவின் விளைவால் தோன்றும் நெருக்கமும்,  அனுமன் அறிவுரையில் சற்று கூடுதல் விலக்கமும், சடாயு உரையில்  
இராமன் மற்றும் இராவணன்  இருவருக்கும் இடையில் தம்மை நிறுத்திக் கொள்ளும் இயல்பும் காணப்படுவது வெளிப்பட்டன சூது என்ற தீய வழக்கம் உனக்கு இல்லை என்றாலும் அதுவே அனைத்துத் துயர்களுக்கும் மூலம் என்பதை நீ அறிந்து கொள் என்ற வசிட்டனின் அறிவுரை இராமனை முற்றறிந்த ஓர் ஆசிரியரின் உரையாக அமைந்திருக்கிறது. சீதையின் அறிவுரை கற்பு என்ற விழுமியத்தை நிறுவும் பான்மையில் திகழ்கிறது. சுக்ரிவனை தழுவிக் கொள்வது, தன்னுடைய வாழ்க்கை மற்றும் வாலியின் வாழ்விலிருந்து சம்பவங்களை எடுத்துக் கூறி நினைவூட்டுவது இவற்றால் சுக்ரீவனுக்கு அமைந்த  இராமனின் அறிவுரை ஒரு நண்பனின்  குரலில் ஒலிக்கிறது. 
இப்படிப்பட்ட புரிதல்களை நான் அடைவதற்குக் களம் அமைத்துக் கொடுத்த இம்பர் வாரி நண்பர்களுக்கு நன்றி! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்