சாத்தானே அப்பாலே போ!

எதையாவது தேட வேண்டும் என்ற நிலையில் கூகுள் குரோம் என்ற பிரவுசரை திறந்து அதில் செய்திகளை உள்ளிட்டு தேடும் வழக்கத்தை பின்பற்றிவந்தேன். நம்முடைய அலைபேசியின் முகப்புத் திரையை இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் நோக்கி  விரல்களால் தள்ள இணையம் திறந்து கொள்ளும் என்பது எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியாமல் இருந்தது. நான்  வாசிப்பிற்கு அலைபேசியில் உள்ள மின்னணு செயலிகள் மற்றும் இணையத்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருப்பதால் என்னுடைய நேரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. 
எனக்குக் கொஞ்சம் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. இணையத்தில் வரும்  விளையாட்டு தொடர்பான செய்திகளை வாசிப்பது மற்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்பதும்கூட கிரிக்கெட் செய்திகளை நான் அதிகம் வாசிக்கக் காரணம்.  ஆனால் இப்போது அதில் தான் பிரச்சனை. 
கிரிக்கெட் செய்திகள் என்ற பெயரில் வெற்று வதந்திகள், எதிர்மறை கருத்துக்கள். இப்போது என் அலைபேசி முகப்புத்திரை ஒரு மின்னணு குப்பைத் தொட்டி என்பதாக இருக்கிறது. எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது என்ன செய்வது?   முகநூலே பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. 
இப்போது ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறேன். 
ஒவ்வொரு முறை இணையத்தைத் திறக்கும் போதும், எதிர்மறை செய்திகளைப் படிக்க நேரிடும் போதும் இலக்கியம், தத்துவம், எழுத்தாளர்கள்  என்று எனக்குப் பிடித்த கலைச் சொற்களை உள்ளிட்டுத் தேடுவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன் . படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை வெறுமனே தேட வேண்டும் அவ்வளவுதான்.  காரணம் நாம் எவற்றை அதிகம் வாசிக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு  அவை போன்ற செய்திகளை எடுத்துத் தருவது தானே சமூக ஊடகங்கள் பொதுவாகக் கடைபிடிக்கும் வழிமுறை. 
 நான் இலக்கியம் கலை உள்ளிட்டவற்றையே அதிகம் தேடுகிறேன் என்று இணையத்தை நம்ப வைத்தால் அது எனக்கு அவை போன்ற செய்திகளை மட்டுமே கொண்டு வந்து என் முகப்பில் வைக்கும். எனவே நான் எதையாவது வாசித்து என் நேரத்தையும் மன நலனையும் அழித்துக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியும், 
 இல்லையா, 
தகவல் குப்பைகளிடமிருந்தும், எதிர்மறை உணர்வு என்ற பேயிடமிருந்தும் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யும் எனக்கு
இந்த மந்திரம் எவ்வளவு நாளைக்கு கைகொடுக்கிறது என்று பார்க்கவேண்டும். 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்