தலையாலே தான் தருதலால்
இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் பக்கத்திலிருக்க ஒரு தென்னங்கன்றை நட்டு வைக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. வாழ்வில் முதல் முறையாக ஒரு தென்னம்பிள்ளையை கையில் ஏந்தினேன். மாணவர் பாரதிராஜா ஈரோடிலிருந்து கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்திற்கு ஒரு பரிசை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. மிகவும் நிறைவான நிமிடங்கள்.
பாரதிராஜா நம்முடைய பல்கலைக்கழகத்தில் முதுகலை பயில்கிறார், பல்கலைக்கழக புதிய சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி சேர்ந்த சில நாட்களிலேயே திரும்பிச் சென்று விட்டார். அவர் திரும்பி வந்துவிட்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் சில மாணவர்களின் உடன் இருப்பே போதும்! பாரதி அதிகம் பேச மாட்டார். ஆனால் நன்றாக ஓவியம் வரைவார். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் வாராந்திர கருத்தரங்கில் ஒரு முறை தன்னுடைய ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்.
கல்வி முடித்துச் செல்லும்போது ஒரு நினைவை பல்கலைக்கழகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்று பாரதிராஜாவுக்குத் தோன்றியிருக்கிறது.
மூன்றாம் வகுப்பில் இந்த வெண்பா பாடமாக இருந்தது.
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொள் என வேண்டா நின்று
தளரா வளர்த்தெங்கு தான் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

Comments
Post a Comment