எமது இல்லத்துக்கு வருக!

சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச்  சென்ற நினைவு. ஒவ்வொரு வருடம் கண்காட்சியில் நான் வாங்கியிருக்கும் நூல்களின் அடிப்படையில் அப்போதைய என் மனநிலையை புரிந்து கொள்ள முடியும். முதன் முதலில் கண்காட்சிக்குச் சென்றபோது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சிறு துண்டுப் பிரசுரங்கள்  மற்றும் குறுநூல்களை அதிகம் வாங்கினேன்.  சில புத்தகங்களின் பெயர்களைச்  சொல்கிறேன். வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக்குழுக்கள் , மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை எவ்வாறு பயில்வது?  இப்படிப்பட்டவை. 
அடுத்த வருடமே சக்கரம் சுழன்றுவிட்டது. உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி? உபநிஷதங்களின் சாரம் முதலிய  புத்தகங்கள்  பக்கம் என் கவனம் சென்றது. 
நண்பர்களுடன் சேர்ந்து செல்வது வழக்கம். வீட்டிலிருந்தே புளி சாதம் தயிர் சாதம் கட்டிக்கொண்டு சென்று, புல் வெளியில் உட்கார்ந்து மதியம் சாப்பிடுவோம்.  அப்போதெல்லாம் சில சுற்றுகளில் ஒட்டுமொத்த கண்காட்சியையே பார்த்து விட முடியும். எவ்வளவுதான் சுற்றி வந்தாலும்  காலை 11 மணி முதல் அங்கேயே அலைந்து திரிந்தாலும்,  மாலை 8மணிக்கு மறுபடியும் உள்ளே சென்று மறந்துபோன ஏதோ ஒரு புத்தகத்தை நினைவு படுத்திக் கொண்டு  அதனை அவசரமாகத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி வருவது ஒரு அலாதியான அனுபவம். 
மணிவாசகர் பதிப்பகத்தில் ஐயா மெய்யப்பன் அவர்கள் அமர்ந்திருப்பார். ஒவ்வொரு வருடமும் நாங்கள் செல்லும்போதெல்லாம் அவருக்குத் தவறாமல் வணக்கம் செலுத்துவோம். அப்போது எங்கள் கல்லூரி குறித்தும் கல்வி குறித்தும் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு‌.  அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை நாங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அவர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். 
தமிழில் முடியும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று அதன்  பதிப்புரையில் இருந்தது. 
அந்தப் புத்தகத்தின் பெயர் பண்பாட்டு மானுடவியல், ஆசிரியர் பக்தவத்சல பாரதி. 
ஒவ்வொரு ஆண்டும் வாங்கி வரும் நூல்களில்  என் பெயரையும் வாங்கப்பட்ட தேதியையும் எழுதுவது அம்மாவின் வழக்கம்.  சில நூல்களின் பெயர்களே  நினைவில் தங்கிவிடும். அந்த ஆண்டு முழுவதும் அந்த குறிப்பிட்ட நூல் மனத்தில் ஒரு தித்திப்பை ஏற்படுத்தும். 
தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் அலைகள் வெளியிட்டகம் சார்பில் வெளிவந்த ரிக் வேதம், உள்ளிட்ட நான்கு வேதங்களையும் வாங்கி நூலக அடுக்கில் வைத்திருக்கிறேன். வேதங்களின் அருகில் வீற்றிருப்பது திருக்குர்ஆன் தர்ஜமா என்ற நூல். 
நான் வாங்கியே தீர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட காரணத்தினால் அப்பா எனக்காக அலுவலகம்  முடிந்ததும் சென்று ஒரு புத்தகம் வாங்கி வந்தார். அதன் பெயர் ஏசு ஒரு நாத்திகர். கவிஞர் நீதிநேசன் என்பவரால் எழுதப்பட்டது. 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் திறக்கப்படவே இல்லை. 
ஓராண்டு விஷ்ணுபுரம்  வீட்டிற்கு வந்தது. என் அப்பாவும் கூட அதனை படிக்க வேண்டும் என்று சொல்லி வந்ததுண்டு.  அம்மா ஒரு பகுதி படித்து முடித்திருக்கிறார். 
இந்த வருடம் நேற்று ஜனவரி 13ஆம் தேதி சென்றிருந்தேன் ‌. நண்பர் மாரியப்பனின் மொழிபெயர்ப்பு நூல் எதிர் வெளியிட்டகத்தில் வெளிவந்த நாளில் சென்றதெல்லாம் கணக்கில் சேராது. 
அறிஞர்கள் எழுதிய நூல்களை முதலில் வாங்கிக் கொண்டிருந்த காலம் கடந்து சென்று , இப்போதெல்லாம் நண்பர்களின் புத்தகங்களை கண்காட்சியில் நிறைய பார்க்கும்படி அமைவது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது
பேராசிரியர் ஜெ. சுடர்விழி என் வகுப்புத் தோழி. திருமுலர் முருகன் என்ற பெயரில்  எழுதி வரும் முனைவர் இரா. முருகன் அவர்கள் எனக்கு ஓராண்டு  மூத்தவர்.சுடர்விழியின் புத்தகங்களையும்,  அண்ணனின் புத்தகத்தையும்  வாங்கி வந்தேன். மாமல்லபுரம் குறித்து ஆசிரியர் பாரதி புத்திரன் அவர்கள் எழுதியிருக்கும் நூலும்  கிடைத்தது. 
இந்த ஆண்டு எனது நூலகத்திற்கு சிறப்பு வரவு என்றால் , அவை ரகுவம்சம் மேக சந்தேஷம் ஆகிய மகாகவி ,காளிதாசரின் படைப்புகள் தாம். 
கபிலன், இளங்கோ, கம்பன், பாரதிக்குப் பக்கத்தில்  காளிதாசரும்  அணிக் கோலம் பூண்டு அமரட்டும்! 
இதோ சென்னையிலிருந்து  குப்பம் நோக்கி  விரையும் தொடர்வண்டியில் என்னுடன் வெக்கையில் வியர்த்தபடி வந்து   ஒரு மகாகவி  இறங்கும்போது அவரை எதிர்கொள்ள தெலுங்கு மொழியின் ஆதி கவி நன்னையா வரக்கூடுமா, என்ன? 
மகாகவி வருக வருக! 
எளியோன், சிறுவன் என்று பொருத்தருள்க! 
இளையவன், இனியவன்   நம்மவன்
 என்று 
என் உள்ளத்தில் எழுந்தருளி அருள் புரிக! ! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்