நட்சத்திரங்களில் நடப்பவர்கள்

பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வுக்கும் உரியவை என்று சொல்லப்படுவதுண்டு
 ஆனால் தூக்கம் வராத பொழுதுகளில் ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்ப்பவர்களுக்கு இன்னொரு உலகம் திறந்து கொள்வதுண்டு. பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள், நோயாளிகள் மட்டுமல்ல மின்னும் நட்சத்திரங்கள், ரகசிய வாசனைகள் என்று இரவு தனக்குரிய மர்மங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறது. 
ஜெயமோகனின் இரவு நாவலின் சில அத்தியாயங்களை அவருடைய இணையதளத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அண்மையில் வந்த ஒரு வாசகர் கடிதம் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. 
சரவணன் என்ற ஆடிட்டர் கேரளத்தில் எர்ணாகுளம் அருகே ஓய்வுக்கு சென்றபோது இரவில் மட்டுமே வாழும் மனிதர்களை  தற்செயலாகச் சந்திக்கிறான். நீலிமாவை சரவணன் சந்திப்பதும் , இரவில் விழிப்பு பகலில் உறக்கம் என்று வாழக்கூடிய , அவளைத் திருமணம் செய்து கொள்வதும் கமலா என்ற பெண்ணின் கொலையும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியது போன்று காட்சியளிக்கும் சில வரிகள். ஆனால் அது கதையைப் புரிந்து கொள்ள உதவவும் செய்கிறது. ஒரு சிறு பாலத்தில் ஏறி படகை அடைவது போல நாம் அந்த வரிகள் மூலமாக நாவலின் அத்தியாயங்களை இன்னும் நன்றாக நெருங்கமுடியும். அசாதாரணமான காட்சி வருநணை நிலச்சித்திரிப்பு, என இரவு ஓர் இலக்கிய வாசகனுக்கு நிறைய நிறைய வழங்குகிறது. பாடிக்கொண்டே இருக்கும் முஸ்லிம் தையல்காரன், பாதிரியார், தாந்திரீகத்துறவி, முன்னாள் ராணுவ அதிகாரி, அவருடைய அழகான மனைவி கமலா என நாவலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் இரவுக்குரிய தீவிரத் தன்மையை, ரகசியத் தன்மையைக் கொண்டுள்ளார்கள் என்பது சம்பிரதாய வாக்கியம் அல்ல. நாவலில் உதயபானு என்ற ஒரு இளம் துறவி வருகிறார். இரவின் மையம் என நாம் குறியீட்டு நிலையில் உணரக்கூடிய தாந்திரீகத் துறவியின் வாழ்க்கை மர்மங்கள் அவரால்தான் பொதுவெளிக்கு கொண்டுவரப்படுகின்றன.  வேறு சொற்களில் சொல்வதாக இருந்தால் இரவின் ரகசியம் சூரியனின் கிரணங்களால்  அவிழ்க்கப்படுகிறது இதனை இன்னும் கூட விரித்தெடுக்கலாம்.  ரகசியச் சடங்குகளை நடத்தும் அந்தத் தாந்திரீகத் துறவி வேறு யாரும் இல்லை, அவர் நாம் தான்! 
இரவு என்பதை நம்முடைய அந்தரங்கத்தின், ரகசிய ஆசைகளின் , நிறைவேறாத ஏக்கங்களின் குறியீடாகவும் பகல் என்பதை  நம்மை நெறிப்படுத்தும் சமூக அதிகாரத்தின் உருவகமாகவும் கூட வாசிக்கலாம். 
இலக்கியம் இனியது, ஏனென்றால் அது ஒரு வாழ்க்கைக்குள் இருந்து கொண்டு ஓராயிரம் வாழ்க்கைகளை நாம் வாழுமாறு செய்கிறது. 
இரவு என்னை கேரளத்தின் காயல் பகுதியில், நதியும் கடலும் சங்கமிக்கும் நீர்வெளியில்,, படகுகளின் அமர முனைகளில், அலைகளும் நானும் மட்டும் தனித்திருக்கும் கடற்கரைகளில்,  பள்ளமான இடங்களில் அமைந்த  இரவு அங்காடிகளில், சீறிப்பாயும் கார்களில் ஆளறவமற்ற சாலைகளில் வாழச் செய்திருக்கிறது. 
உங்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் அமையாமல் போகாது.
 நண்பர்களே இந்த நாவல் கிண்டிலில் கிடைக்கிறது. 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்