பெருங்கைத் தீண்டல்

கல்லூரி மாணவர்கள் குறிப்பாக தமிழ் படிப்பவர்கள் கூடுதலாக எவற்றை யுமே படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தீவிர இலக்கிய மேடைகளிலும், இதழ்களிலும்  அவ்வப்போது ஒலிப்பதுண்டு. .
இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு அடிப்படை  இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் கூட எங்களைப் போன்றவர்கள் செய்யக்கூடியது என்ன என்பதே கேள்வி. 
வகுப்பில் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தலாம், நூல்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடம்  வளர எங்களால் இயன்றதைச் செய்யலாம். மாணவர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள், எழுத்தாளர்கள் சார்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தலாம். மேலும்
சிறிய அளவில் இதழ்களை நடத்தும் முயற்சியில் ஈடுபடலாம். விளைவாக எங்களுடன் இருக்கும் மாணவர்கள்  இலக்கியம்,  இதழியல் இரண்டிலும் அறிமுகமும் அனுபவமும் பெறுவார்கள். 
சென்னை அடையாறில் உள்ள தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியின் மாணவனாக இருந்தபோது  வெளிச்சம் என்ற ப்ரெயில் இதழை நடத்தியிருக்கிறோம்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது நண்பர்கள் ஒன்றிணைந்து ஓடம் என்ற கையெழுத்து இதழை நடத்தியிருக்கிறோம் . 
எழுத்தாளர் சரவணன் சந்திரன் அண்மையில் ஒரு நேர்காணலில் ஓடம் குறித்து இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகும் இதழ்கள் நடத்த வேண்டும் என்ற கனவினை நண்பர் கதிரவன் அவ்வப்போது முன் வைப்பதுண்டு. கதிரால் கனவு காணாமல் இருக்கவே முடிவதில்லை. 
இதோ 2024 பிறந்துவிட்டது.  நண்பர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து பொற்றாமரை என்ற இணைய  இதழ் தொடங்குகிறோம். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் படைப்புகளை வெளியிடத் திட்டம். மாத இதழாக இணையத்தில் கொண்டு வரும் எண்ணம். 
. படைப்புகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் வெளியிடும் விருப்பம். பாலக்காடு சித்தூர் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியநண்பர்களும்  மாணவர்களும் கனவின் சுடரை ஏந்திக்கொள்கிறார்கள். பல்வேறு நண்பர்கள் உடனிருக்கிறார்கள். 
ஜனவரி 11 வியாழக்கிழமை சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த்துறைக்கு பேராசிரியர் வேத சகாய குமார் நினைவுப்பேருரை நிகழ்த்த எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்கள்  வருகை புரிந்தார். விழாவில் அவர் பொற்றாமரையின் சின்னத்தை வெளியிட இசைந்தமை எங்களின் பேறு. தமிழ் மரபின் தகைசால் ஆசிரியரின் உடனிருப்பும்  நற்சொல்லும் எங்களுக்கு ஒளியாகவும் அரணாகவும்  அமையும்.
 ஒரு பெருங்கை வேழத்தின் அருந்தீண்டல்! 
 இதனை நனவாக்கிய சித்தூர் அரசுக் கல்லூரி நிர்வாகத்தினர், தமிழ்த்துறை ஆசிரியப் பெருமக்கள், விழாக் குழுவினர் உள்ளிட்ட எல்லோருக்கும் என் வணக்கங்கள். 
உங்கள் பார்வையினாலும்  படைப்புகளாலும்  ஆலோசனைகளாலும், விமர்சனங்களாலும் பொற்றாமரையைத்  தொடர்ந்து  மலரச் செய்யுங்கள் நண்பர்களே! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்