விண்ணில் விரியும் சிறகுகள்

கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது  நம் கற்பனையால் விரிகிறது. 
உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம்.  
காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள்
‌ நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப்  பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள். 
காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு  உயிரல்ல, வெறும் அணிகலன்கள்  . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும்  கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம். 
புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன்,  பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும்  கிழவர், அவ்வப்போது  வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள்  என்று தொடரும் நாவல்.  
நாவலில் முக்கியமான மூன்று பெண்கள். தெய்வம் போன்ற விசாலாட்சி, மானுடப் பெண்ணான  காமாட்சி, இரண்டுக்கும் இடைப்பட்ட சினேகாம்பாள். 
கிட்டாவு  ஐயரைத் தன் கைப்பிடியில் வைத்துக் கொள்ள ஏங்கும், குடும்பம் என்ற பொது அடையாளத்திலிருந்து தனக்கென்று தன் குழந்தைகளுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள முயல்பவள் தான் சினேகாம்பாள்.
வயிற்றுப் பாட்டுக்காக மதம் மாறும்  கிட்டாவு  ஐயர்.அவருடைய மனைவியாக சினேகாம்பாள். தொடக்கத்தில் அவளுக்கு பணம் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. பிறகுதான் அதை விடவும் மதிப்புமிக்க வேறுசில விஷயங்கள் இருப்பதாக அவளுக்குத் தெரிய வருகின்றன. 
சினேகாம்பாளுடைய அப்பா நோயில் கிடக்கையில் அவரை எங்கும் அனுப்ப வேண்டாம். மருந்து கொடுத்து அறைக் கதவை பூட்டி விட்டாள். அவர் வெளியேறி எங்கும் செல்ல மாட்டார். நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று விசாலாட்சி வாஞ்சையாகக் கூற சினேகம்பாள் மனம் கரைந்துவிடுகிறது. 
தன் வம்சக் கதையை எழுத முயலும் கதை சொல்லிக்கு தான் எழுதியது வம்சக்கதையே அல்ல, அவ்வப்போது வந்து பேசி விட்டு சென்றவர்கள் அவன் முன்னோர்களே அல்ல என்று நாவலின் இறுதியில் தெரியவருகிறது. அப்போது கதை சொல்லி எல்லாக் கதையும் என் வம்சக் கதை தான் என்று மனவிரிவு கொள்கிறான். 
இந்த கடைசி அத்தியாயத்தில் இருந்து நாவல் மேலும் எழுகிறது. 
பொதுவாக மாய யதார்த்த எழுத்து என்றால் அந்தப் பக்கம் தள்ளிப் போகும் எனக்கு இரா .முருகனின் எழுத்து மிகப்பெரிய இலக்கிய அனுபவமாக இருந்தது. ரமேஷ் பிரேதனில் ஐந்தவித்தான் நாவலும் எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கிறது. 
வீடுகள் மேல், கோயில்கள் மேல் எழும்பிச்செல்லும் வயசனைப் போல நாமும் பறந்து செல்ல நாவல் அழைக்கிறது. பெண் வேடமிட்டு திருமண ஊர்வலத்தில் ஆட ஆண்களை அழைக்கிறது அரசூர் வம்சம். 
எல்லாமே கற்பிதங்கள் தான், நாமாக சூடிக்கொள்ளும் அடையாளம் தான் என்றிருக்க பல்லியாக இருப்பதை விட பறவையாக இருப்பது மேல் அல்லவா என்கிறது அரசூர் வம்சம்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்