கயிற்றில் நடக்கும் கலை

எழுத்தாளர் பா .ராகவனின் 'ரெண்டு' என்ற நாவல். சற்றே கால் இடறினாலும் கயிற்றிலிருந்து கீழே விழும் ஆபத்தான பயணம் தான்.
அவந்திகா என்ற பிராமணப் பெண் மனோஜ் ,விக்டர் என்ற இருவர் மீதும் காதல் கொள்கிறாள். இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறாள். தொடர்ந்து என்ன நிகழ்கிறது என்பதே கதை. 
பேராசிரியர்களாகப் பணியாற்றும், தங்களின் அறிவையும் ஆளுமையையும் அதிக அளவு நம்பிச் செயல்படும் மூன்று பேரின் வாழ்க்கை நிகழ்வுகள் நாவலாக புனையப்பட்டிருக்கின்றன.
 திருவானைக்கோயில்  பற்றி எழுதும் போதும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளைப் பற்றி விவரிக்கும்போதும் பா.ராவின் எழுத்து சிறப்பாகவே வந்திருக்கிறது. பெருநகரங்களுக்கு பக்கத்திலிருக்கும் சிறு பகுதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுவதுபோல அவந்திகா தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்றும் நாம் நாவலை  வாசிக்கலாம். 
வெளிநாட்டுப் பயணத்திலிருக்கும் அவந்திகாவின் விமானம் கடத்தப்படுகிறது. தனது கடந்த கால வாழ்க்கை பற்றிய அவளது நினைவுகளே இந்த நாவவ். 
அவந்திகா, அரசு ஊழியரான அவளுடைய அப்பா, ஆச்சாரமான தாத்தா, பொதுவாக சிறிய ஊர்களில் அதிகம் காணப்பட வாய்ப்புள்ள வம்பு பேசும் எதிர் வீட்டுக்காரர், சென்னை நகர வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கத்து வீட்டுக்காரர்கள், பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் பெண் என பாத்திர உருவாக்கங்கள் மனதில் நிற்கின்றன. 
அவந்திகா,மனோஜ், விக்டர் 
இந்த மூன்று பேரில் விக்டரின் ஆளுமை உருவாக்கம் நன்றாகவே வந்திருக்கிறது. 
பிறக்கப் போகும் தன்னுடைய குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா என்று அவந்திகா அறிவிக்கும் போது நாவல் இன்னும் மேலெழுந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. 
குழந்தையை மனைவியை உரிமை கொண்டாடும் மனோஜின் மனமாற்றத்திற்கு அமைந்த காரணங்கள் படிப்படியாக விளக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படி நிகழாமல் அவந்திகாவின் அறிவிப்புக்கு முற்பட்ட பகுதி, பிற்பட்ட பகுதி என நாவல் இரண்டாக பிரிந்து நிற்கிறது. 
குழந்தை பேற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவந்திகாவுக்கு ஒரு தரிசனம் அமைகிறது. பக்கத்து படுக்கையிலிருக்கும் பெண் ஜன்னி கண்டு இறந்து போகிறாள். முதலில் ஜன்னி வந்த போது அவள் மருத்துவர்களால் காப்பாற்றப்படுகிறாள். ஆனால் அவள் ஒரு பேப்பரில் மறுபடியும் தனக்கு ஜன்னி வரும் என்றும், தான் இறக்கப் போவதாகவும் எழுதி வைப்பது மட்டுமல்ல,  தனது கணவர் கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் எழுதுகிறாள்.  ஆனால் தனது குழந்தையை தன் அம்மாவிடம் கணவர் ஒப்படைத்துவிடவேண்டும் என்றும் அந்தப் பெண் எழுதிவைத்துவிட்டு இறந்து போகிறாள். தான் இப்படி பேப்பரில் எழுதி வைத்திருப்பதாக அந்தப் பெண் அவந்திகாவிடம் சொல்லும்போது அவந்திகாவுக்கு அவளை ஓங்கி அறையவேண்டும் என்று தான் தோன்றுகிறது. அந்த அளவு தர்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவள் அவந்திகா. ஆனால் அந்தப் பெண் எழுதி வைத்தவாறு நிகழும் போது அவந்திகாவின் உள்ளம் திகைக்கிறது. ஒருவருக்கு ஏற்படும் இப்படிப்பட்ட அனுபவங்களுக்கு இருத்தலியலில் எல்லைக்கோட்டு அனுபவம் என்று பெயர்.. 
எந்த ஒரு அனுபவம் வாழ்க்கை பற்றிய ஒருவரின் பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கக்  கூடியதோ அந்த அனுபவத்தை எல்லைக்கோட்டு அனுபவம் என்று சொல்வதுண்டு. 
இந்த அனுபவம் அவந்திகாவின் உள்ளத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல் போகிற போக்கில் ஒரு சாதாரண நிகழ்வு போல நாவலில் சொல்லப்படுகிறது.. இவ்வாறு மிகப்பெரிய அனுபவம் ஒன்று எளிதில் கடக்கக்கூடிய ஒன்றாக இருப்பதை ஏற்க முடியவில்லை.
மற்றபடி ,குழந்தையைக் கவிதை என்று விளக்கும் பகுதி , கவிதா குட்டி என்று அவந்திகா குழந்தையைக்  கொஞ்சுவது என்று நாவலில் ஆங்காங்கு வண்ணங்கள் தெரிகின்றன. 
சவால் மிக்க ஒரு கருவை எடுத்துக்கொண்டு எழுதியமைக்காக எழுத்தாளர் பா.ராவைப்  பாராட்டலாம்தான்,கதாபாத்திர உருவாக்கத்தில், நாவல் கட்டமைப்பில்  உள்ள பிசகுகளை பொறுத்துக் கொள்ள முடிந்தால். 
குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த நாவல் இது. இந்த நாவல் கிண்டிலில் கிடைக்கிறது. 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்