484 ாழ்த்துக்கள் பத்மநாபன்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு  விருப்பம் அதிகம். ஒரு நாட்குறிப்பில் வேலைகளை எழுதி வைத்து அவற்றை செய்து முடித்தவுடன் டிக் செய்து கொள்வது, ஒவ்வொரு வாரமும் மொத்தமாக கணக்கிட்டு செய்து முடித்த வேலைகளுக்கு ஏற்ப எனக்கு நானே மதிப்பெண் வழங்கிக் கொள்வது எல்லாம் நினைவிருக்கிறது. அக்கா அதனை எடுத்து எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மதிப்பெண்களுக்காக என்னை கேலி செய்ததுண்டு. அக்கா அல்ல இன்னொரு அம்மா என்று அவளை நான் உணரத் தொடங்கி இருந்தபோது நான்  சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வதில் விருப்பம் கொண்ட எனக்கு எழுதுவது மட்டும் கை கூடவே இல்லை. ஒரு மகனாக, அப்பாவாக, ஆசிரியராக மகிழ்வு கொள்ளும் என்னால் என்னுடைய எழுத்துப் பங்களிப்புகள் பற்றி மட்டும் சொல்லிக் கொள்வதில் தயக்கமும் பதற்றமும் உண்டு. 
2023 ஜனவரியின் தொடக்க நாட்கள் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் முன்னெடுக்க ஆயிரம் மணி நேர வாசிப்பு பணியில் நண்பர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள். கதிரவன் என்னை அழைத்து வாசிப்பு சவாலில் பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்டபோது நான் தயங்கினேன். காரணம் எனக்கு இருக்கும் சிக்கல் பிரிதோர் களத்தில் என்பதை அறிந்திருந்தேன். 
ஜனவரி  ஒன்றாம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று மணி நேரமாவது எழுத வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். 
என்ன செய்தேன்?  
என்னுடைய கூகுள் காலண்டரில் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி அளவில் ஒரு நோட்டிபிகேஷன் வரும்
 மூன்று மணி நேரம் எழுதுவது என்பது இலக்கு, இன்று எவ்வளவு நேரம் எழுதினேன்? 
என்று அது அமைந்திருக்கும். நான் அன்று எவ்வளவு நேரம் எழுதினேனோ அந்த நேரத்தை நோட்டிபிகேஷன் பகுதியில் உள்ளிடுவேன். 
ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் ஏழு நாட்கள் என்றாலும் 5 நாட்களை கணக்கிட்டு வாரம் 15 மணி நேரம்  ஒரு மாதத்துக்கு 60 மணி நேரம், அப்படி என்றால் 12 மாதங்களுக்கு தலா 60 மணி நேரம் என்று 720 மணி நேரம். மே மாதம் விடுமுறை என்பதால் ஒரு 30 மணி நேரத்தை கூடுதலாக கண்டுபிடித்து எழுத வேண்டும். அப்படி செய்ய முடிந்தால் எனக்கு 750 மணி நேரம்  கிடைக்கும்.  
நண்பர்கள் ஆயிரம் மணி நேரம் வாசிப்புச் சவாலை வெற்றிகரமாக கடந்திருக்கும் போது நான் 750 மணி நேரம் எழுதியிருப்பேன். 
ஜனவரி ஒன்றாம் தேதியே இந்த விசுவாமித்திரனின் தவம் கலைக்க தேவலோகமங்கயர் திரண்டு வந்தார்கள். எழுத உட்கார்ந்தபோது நான் பயன்படுத்தும் பென் டிரைவ் பல்கலைக்கழகத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. அதற்காகவெல்லாம் அசந்து விடுவானா  கு. பத்மநாபன்?  எழுதியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் இரண்டு வருடமாக தவிர்த்து வந்த கோபுரப் படிக்கட்டுகள் என்ற சிறுகதையை எழுத ஆரம்பித்தேன்
 பொங்கல் விடுமுறையின் போது சென்னையில் சுதா ரகுநாதன் கச்சேரி கேட்க சென்றிருந்தேன். இசைக்காக எழுத்தை தள்ளிப் போட முடியுமா என்ன?   பேருந்தில் உட்கார்ந்தவாறு அலைபேசியில் எழுதியிருக்கிறேன்.  
இது ஒரு மதிப்பெண் பட்டியல்
ஜனவரி 45 மணி நேரம் 45 நிமிடம்
பிப்ரவரி 71 மணி நேரம் 15 நிமிடம்
மார்ச் 27 மணி நேரம் 15 நிமிடம்
ஏப்ரல் 46 மணி நேரம் 15 நிமிடம்
மே 20 மணி நேரம் 15 நிமிடம்
ஜூன் 34 மணி நேரம் 35 நிமிடம்
ஜூலை 40 மணி நேரம் 55 நிமிடம்
ஆகஸ்ட் 45 மணி நேரம்
செப்டம்பர் 47 மணி நேரம் 30 நிமிடம்
அக்டோபர் ஐம்பது மணி நேரம் 10 நிமிடம்
நவம்பர் 25 மணி நேரம் 45 நிமிடம்
டிசம்பர் 29 மணி நேரம் 30 நிமிடம்
கூட்டிப் பாருங்கள். கணக்கு ஏதாவது முன்னே பின்னே இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்
 
பிப்ரவரி மாதம் அதிகபட்சமாக 71 மணி நேரம் எழுதியிருக்கிறேன். சில மாதங்கள் 20 மணி நேரம் எழுதியிருப்பேன். 
இந்த ஒரு வருடத்தில் ஒரு சிறுகதை, இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்,  சுமார் 8 முனைவர் பட்ட ஆய்வேடுகள் மீதான மதிப்பீட்டு அறிக்கைகள், இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் முதல் வரைவுகள்,  என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலின் சுமார் 20 அத்தியாயங்கள், 125 பக்கங்கள்  கொண்ட ஒரு குரு நூல் இவை அனைத்தையும் எழுதி முடித்திருக்கிறேன். 
டிசம்பர் மூன்றாம் தேதி நடந்த  ஒரு இணைய வழி சந்திப்பில் பார்வையற்றவர்களின் எழுத்துச் சவால்கள் குறித்து பேசினேன். பார்வை உடையவர்கள் ஒரு மணி நேரத்தில் செய்வதை பார்வையற்றவர்கள் செய்து முடிக்க சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் தேவைப்படுகிறது என்று நான் சொன்னதை மற்ற பார்வையற்ற நண்பர்களும் ஒப்புக் கொண்டார்கள். 
இன்று டிசம்பர் 31 இந்த வருடம் எழுத்துக்காக நான் செலவழித்த நேரத்தை கணக்கிட்டுப் பார்க்கிறேன். 484 மணி நேரம் 10 நிமிடங்கள் என கூகுள் கேலண்டர் காட்டுகிறது.‌ 
484 க்கும் 750 க்கும்  நடுவில் இடைவெளி இருக்கிறது , உண்மை. ஆனால் என்னால் 475 மணி நேரத்தை ஆக்கபூர்வமாக செலவழிக்க முடிந்திருக்கிறது. நிறைவாக இருக்கிறது. 
2024 இன்னும் சிறப்பாக அமையட்டும். சொல்ல மறந்து விட்டேன், எதையாவது எழுத வேண்டும் என்றால் உடனே என்னை வந்து தொற்றிக் கொள்ளும் பதற்றம் இப்போது குறைந்திருக்கிறது. 
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே! ! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்