நெடுஞ்சாலையில் நின்றிருக்கும் அடர் வண்ணமாருதி

நேற்றிரவு குப்பத்திலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தோம். வேலூரைத் தாண்டியவுடன் மழை பிடித்துக் கொண்டுவிட்டது. வண்டியின் முன்பகுதிக் கண்ணாடியில் படியும் மழை தண்ணீரைத் துடைத்து விடும் வைப்பர் சரியாக வேலை செய்யவில்லை.  நண்பர் முனியப்பன் சிறப்பாகவே ஓட்டுவார். நேற்று அவருக்கும் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்த அளவு மழை அடித்துக் கொட்டியது. 
எனக்கு சுஜாதாவின் சிவப்பு மாருதி என்ற சிறுகதை நினைவுக்கு வந்துவிட்டது. நம்முடையதும் மாருதி கார் தான். சிவப்பு நிறம் இல்லை என்றாலும் அடர் நிறம் . 
பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு காரில் வரும்   குடும்பம் சந்திக்கும் நெருக்கடி தான் கதை. குப்பம் கூட  பெங்களூருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. அந்தக் கதையில் வருபவர்கள் போல நானும் ஒரு திருமணத்தில் பங்கேற்கவே சென்னை வந்து கொண்டிருக்கிறேன். 
எனது மூத்த மகன் அபிஷேக் காரின் வலது பக்க கதவைத் திறந்து சாலையில் இறங்கி பழுது நீக்குவது பற்றி நண்பர் முனியப்பனிடம் பேசிக் கொண்டிருந்தான். கார் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது. 
இறையாற்றல் என்னிடம் மிகப்பெரும்பாலும் பேரன்புடனும் பெருங்கருணையுடனும் மட்டுமே  நடந்து வந்திருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். எப்போதும் அது என்னை தன் மடியில் இருத்தி அமுதினை அள்ளியள்ளி ஊட்டியபடியே இருக்கிறது. பாடம் படிக்க மட்டும் அடம் பிடிக்கும் என்னுடைய அபிநவ பாரதியின் (இளைய மகன்)  சேட்டைகள் போல அதன் லீலைகள்  பெரும்பாலும் இனியவை தான். இப்படியிருக்க வருந்தும் படி எதுவும் நடந்து விடுவதற்கில்லை  என்ற விவேகம் அப்போது எனக்கு கை கொடுக்கவில்லை. நான் அபிஷேக்கிடம் கத்தி விட்டேன். 
குழந்தை உள்ளூர வருத்தப்பட்டிருக்கலாம். 
காரின் முன் பக்கத்தை திறந்து முனியப்பனும் அபிஷேக்கும் ஏதோ செய்து கொண்டிருந்தபோது நான்  சிறுகதைக்குள் போய்விட்டேன். 
விபத்து ஏற்படுத்தியதாகத்  தவறாக நினைத்து சிவப்பு மாருதி காரில் வருபவர்களை ஊர்மக்கள் பிடித்துக் கொள்கிறார்கள். அந்தக் காரிலிருக்கும் 70 வயது பாட்டியின் தைரியமும் வாழ்வை எதிர்கொள்ள்வதில் வெளிப்படும் சாகச உணர்வும்   சுஜாதாவால் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. 
கடைசியில் ஒரு காவல் அதிகாரியின் உதவியாள் எல்லாம் முடிவுக்கு வருகிறது. 
மழை பெய்யும் இரவில் பழுதாகி நின்றிருக்கும் காரில் உட்கார்ந்தபடி சிவப்பு மாருதி சிறுகதையை படிப்பது ஒரு திகில் அனுபவமாகவே இருக்கிறது. காட்டோரத்தில் பாழடைந்த பங்களாவில் தனித்திருந்து  பேய்க் கதை படிப்பது போல! . 
இதுவரை படித்திருக்காத நண்பர்களுக்கு சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது என்ற தகவல் உதவியாகயிருக்கக்கூடும். 

Comments

  1. Lord Raghavendra always with you .His blessings always for you and your family

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்