எல்லோர்க்கும் பெய்யும் மழை

பரபரப்பான ஒரு காலை நேரம். சென்னை அம்பத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நான் சாலையைக் கடக்க முயன்று கொண்டிருக்கிறேன். அந்தக் கரம் என் கையைப் பிடித்துக் கொண்டது. நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கக்கூடும். என்னைப் பற்றிய அறிமுகத்துக்குப்  பிறகு என் கனவுகளைக்கேட்டார் விஸ்வநாதன் சார்.  நிறைய நிறைய படித்து முனைவர்ப் பட்டம்  பெறுவது என் கனவு என்று நான் அவரிடம் சொன்னேன். அன்று மாலையே என் வீட்டுக்கு அவர் வருவார் என்பதும், என் அம்மாவிடம் உங்கள் மகன் படிப்புக்கு இனிமேல் நான் பொறுப்பு என்று அவர் சொல்வார் என்பதும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 
அவர் மட்டுமல்ல, அவருடைய தம்பி நாராயணன் அவர்கள், நாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி சாந்தி அவர்கள், சாந்தி அவர்களின் அலுவலகத் தோழி பகுத்தறிவு அவர்கள் என என்னுடைய கல்வி வளர்ச்சியில் ஒரு குழுவே அவர் மூலமாக இணைந்து கொண்டது. . 
ஆயிரக்கணக்கான பக்கங்களை நூற்றுக்கணக்கான ஒலி  நாடாக்களில் எனக்காக அவர் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். சுந்தர ராமசாமி எழுதிய ஜேஜே சில குறிப்புகள் வாசித்துவிட்டு  என்னிடம் விவாதித்தார். தாம்  பங்களாதேஷுக்கு அலுவலகப்  பணியாக சென்றபோதும் சரி, ஹைதராபாத்தில் இருந்த போதும் சரி எனக்காக ஒலிப்பதிவு செய்வது தடைப்பட்டதில்லை.  
கொரியரில் என்னை வந்து சேரும் கேசட்டுகளுக்காகக்  காத்துக் கொண்டிருப்பேன். 
அதன் பிறகு ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பும் வழக்கம் உருவானது.  புகழ்பெற்ற கன்னட சிந்தனையாளர் டி ஆர் நாகராஜ் எழுதிய The flaming feet என்ற நூல் ஒன்றை முழுவதும் வாசித்து அதில் உள்ள கடினமான சொற்களுக்கு அகராதிப் பொருளையும் வாசித்து எனக்கு அனுப்பி வைத்தார்.  எனக்காக ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை அவர் வாசித்திருப்பார். வாசித்து வாசித்து அவர்   குரலே மொத்தமாக அடைத்துப் போய்விட்டது. கொஞ்சமாவது ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாதா என்றாலும் கேட்க மாட்டார் பொதுவாக பார்வையற்றோர் மீதும்,  குறிப்பாக என் மீதும் அவ்வளவு அக்கறை விஸ்வநாதன் சாருக்கு. வாசிப்பு தவிர அவருக்கு வேறு சில ஈடுபாடுகளும் உண்டு. அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் பல நோய்கள் நீங்கும் என்பது இயற்கை மருத்துவம் சார்ந்த  ஒரு கருத்து.  இந்தக் கருத்தை  விளக்கும் சிறு துண்டுப்  பிரசுரங்களை அச்சடித்து சாலையில் பார்ப்பவர்களுக்கெல்லாம் கொடுப்பது அவருடைய வழக்கம். மிகையாகச் சொல்லவில்லை சில ஆயிரம் துண்டுப் பிரதிகளை தம்  சொந்தச்செலவில் அச்சடித்து விநியோகித்திருக்கிறார். தான் வாசித்த  ஆடியோ கேசட்டுகளை எடுத்துக்கொண்டு அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவார். கேசட்டுகளுடன் கண்டிப்பாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வரும். நான் கேசட்டுகளை அல்ல,  பிஸ்கட் பாக்கெட்டைத் தான் முதலில் பிரிப்பேன்  
முதலில் அம்மாவிடம்,  அப்புறம் அக்காவிடம்  மிக உரிமையுடன்  காபி கேட்டுச்  சாப்பிடுவார். எங்கள் சந்தோஷத்தை சொல்லி விளக்கிவிட முடியாது.  ஜோதி வந்த பிறகு அவளிடம்  கேட்டு காபி குடிக்கும் வழக்கமாக  அது பிற்காலத்தில் மாற்றமடைந்தது. எனக்காக சுமார் பத்து வருடங்கள் ஒவ்வொரு நாளும் விஸ்வநாதன் சார் வாசித்திருப்பார். 
தாம் வாசித்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான ஒலிநூல்களை சென்னை கோவை நகரங்களில் உள்ள அரசு நூலகங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். 
பகவான் சீரடி சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி அவருக்கு. விஸ்வநாதன் சார் போன்றவர்களின் அர்ப்பணிப்பால் நான் சார்ந்த பார்வையற்ற சமூகம் தனது  தடைகளை பெருமளவு கடந்து வந்திருக்கிறது என்ற சொற்கள் சம்பிரதாயத்திற்காக சொல்லப்படுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு பொதுவுடமை சிந்தனையாளர் தோழர் கண்ணன் அவர்களின் முன்னெடுப்பில் C S G A B  எனப்படும்  பார்வையற்ற. கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்   என்ற அமைப்பு சென்னை தியாகராய நகர் தக்கர் பாபா வளாகத்தில் எழுந்தது. நூற்றுக்கணக்கானவர்களது வாழ்வில் இந்தச்  சங்கம் ஒளியேற்றி வைத்திருக்கிறது. 
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து பார்வையற்றவர்களின் வாழ்க்கை எவ்வளவோ நல்ல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் இந்த காலச் சூழலில் ஒரு சிறிய  பதிவின்  வாயிலாக திருமிகு விஸ்வநாதன் அவர்களுக்கு என்னாலான  வணக்கத்தை செலுத்துகிறேன்.  
மானுடம் வென்றதம்மா! 



Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்