முனைக அறிமுகம்

நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் ஒரு தரமான முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை உருவாக்க ஏன் சிரமப்படுகிறார்கள் என்ற வினா வெகு நாட்களாக என்னுள் இருக்கிறது. இதற்கான காரணங்களை விவாதிக்க வேண்டும், எனக்குத் தோன்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தத்  தொடர். 
இங்கு நான் விவாதிக்கவிருக்கும் சிக்கல்கள் பல என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு காலத்தில் எனக்கும் இருந்தன. நான் அவற்றுள் சிலவற்றை எவ்வாறு எதிர்கொண்டேன், வேறு சிலவற்றை இன்னும் எவ்வாறு எதிர்கொண்டிருக்கலாம் என்பதை விளக்குவதே இந்தத் தொடர். 
இந்தத் தொடரில் நான் பேசவிருக்கும் விஷயங்கள் பலவற்றை திராவிடப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களிடம் தனிப்பட்ட உரையாடல்களிலோ அல்லது பொது வெளியிலோ சொல்லியிருக்கிறேன். அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த முயற்சி. 
நம்முடையதாக நாம் இன்று உணரும் சிக்கல்கள் பல நமக்கு மட்டும் உரிய சிக்கல்கள் அல்ல என்பதை இப்போது அடிக்கடி உணர்கிறேன். 
கேரள மாநிலம்,பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் நண்பர் க. கதிரவனும் நானும் இந்தப் பொருள் குறித்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அது இன்னும் கனவாகவே நீடிக்கிறது. இந்தத்தொடர் நூலாக்கம்  செய்யப்பெறும்போது கதிரின் கருத்துகளையும் சேர்த்து விரிவு படுத்திக் கொள்ளலாம். 
தமிழில் இந்தப் பொருள் குறித்து இதற்கு முன் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றனவா  என்று தெரியவில்லை. இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். 
என்ன எதிர்பார்க்கலாம்? 
இந்தத் தொடரில்ஆராய்ச்சி நெறிமுறைகளை விளக்கும் கட்டுரைகளை எதிர்பார்க்க வேண்டாம் ‌.  மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள், பணி வாய்ப்பு ஆலோசனைகள் முதலியவையும் இந்தத் தொடரில் வெளிவர வாய்ப்பில்லை.  ஓர் ஆய்வேட்டை உருவாக்க இன்றியமையாததாகயிருக்கும் ஆய்வாளரின் மனநிலை, தேடல், திரட்டல், கருத்துக்களை முறையாக முன்வைத்தல் முதலிய நிலைகளில் பயன் தரும் ஆலோசனைகள் இங்கு முன்வைக்கப்படும். 
மேலை நாடுகளில்  ஆய்வெழுத்துப் பயிற்றுநர்கள் ( Dissirtation coach ) என்ற நிலையில் இருக்கும் சிலர்   ஆய்வாளர்களுக்கு தேவையான இது போன்ற உதவிகளை தொழில் முறையில் மேற்கொள்கிறார்கள். 
ஆய்வாளர்களின் இந்த சிக்கல்கள் குறித்து விவாதிக்கும் சில ஆங்கிலப் புத்தகங்களையும் அறிவேன். உதாரணம் பெட்ரிஷியா குட்சன்‌ (patricia goodson) எழுதி சேஜ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள  Becoming an academic writer: 50  exercises for paced,productive,and powerful writing  என்ற புத்தகம் இதில் மாணவர்கள் தங்களின் முனைவர்ப் பட்ட காலகட்டத்தில் எதிர்கொள்ளும் எழுதுதல் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வுகளும் பயிற்சிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.  ராபர்ட் பாய்ஸ் என்ற பிரிட்டிஷ் உளவியலாளர்  பேராசிரியர்கள் எழுதுதல்  தொடர்பாக சந்திக்கும் சிக்கல்களை ஆராய்ந்திருக்கிறார் இவர் எழுதியுள்ள நூலொன்றையும் வாசித்திருக்கிறேன்.  இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு நமது மாணவர்களுக்கு உதவ முடியுமா எனப்பார்க்க வேண்டும்.  
எப்போதெல்லாம் வெளிவரும்? 
எப்போது வேண்டுமானாலும் வெளிவரும். 
எத்தனை கட்டுரைகள் இடம்பெறும்? 
இப்போதைக்கு  இத்துணை கட்டுரைகள் தான் எழுத வேண்டும் என்ற முன் திட்டம் எதையும் வகுத்துக் கொள்ளவில்லை . 
முடிந்தால் எழுதலாம், முடியும்போதெல்லாம் எழுதலாம், முடிந்த அளவுக்கு எழுதலாம் என்பதே எண்ணம். 
எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? 
இந்த தொடரில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையானதாக அமைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதப்படும். எனவே மாணவர்கள் தங்கள் ஆய்வுக் காலத்தில் சந்திக்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து இந்தத் தொடரின்  கட்டுரைகள் விவாதிக்கின்றன என்ற பொதுவான புரிதலில் கட்டுரைத் தொடரை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
தமிழாய்வின் தரம் தாழ்ந்து விட்டது என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டிருப்பதைவிட தமிழாய்வின் தரம் உயர்வதற்கு நம்மால் இயன்றவற்றை நாம் நம்பிக்கையுடன் மேற்கொள்வோம். அதற்காகத்தானே நாம் தொடருக்கு முனைக என்று தலைப்பிட்டிருக்கிறோம்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்