பாரதி என்னும் நிகழ்வு

பாரதி பற்றி விடுதலைப் போராட்ட வீரர் திருமிகு வ. ரா அவர்கள் எழுதிய நூல் மகாகவி பாரதியார். பாரதியாரின்  வாழ்வை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த புத்தகத்தில் வ.ரா முன்வைத்துள்ளார். பக்தன் தெய்வத்தை ஆராதிப்பது போல் பாரதியை அவர்  கொண்டாடுகிறார். 28 அத்தியாயங்களில் ஆற்றோழுக்கான நடையில் பாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை குறித்த சித்திரத்தை இந்த புத்தகம்  வெளிப்படுத்துகிறது. 
தாயில்லாப் பிள்ளையாக,  தந்தையின் பரிவைப் பெற்ற பையனாக,  மொழியை கற்றுக் கொள்வதில் அளவு கடந்த திறமை கொண்ட  இளைஞனாக பாரதியின் தொடக்க கால வாழ்க்கை விளக்கப்பட்டிருக்கிறது. 
ஜி. சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி அய்யங்கார், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் முதலிய அற்புதமான நண்பர்களால் பாரதி சூழப்பட்டிருக்கிறார். 
இந்த புத்தகம் பாரதியின் புதுவை வாழ்க்கை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. பாரதியின் வாழ்வில் படைப்பூக்கம் மிக்க காலகட்டம் என்று புதுவை  காலகட்டத்தையே சொல்ல முடியும். 
பாரதிக்காக வ.ரா மொழியில் அமைத்த பேராலயம் இந்நூல். . இந்த   ஆலய மூலஸ்தானத்தில் பாரதி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதேசமயம் அரவிந்தர், வ. வே.சு ஐயர் முதலிய வரலாற்று மாந்தர்களின்  வாழ்வும் பங்களிப்பும் கூட போதுமான அளவு விளக்கப்பட்டுள்ளன.  . 
பாரதி மறைவுக்குப் பிறகு அவர் குறித்து பேசித்  தங்கள் மீது ஒளிப்பாய்ச்சிக் கொண்டவர்கள்,  காந்தியை பாரதி  சந்தித்த நாளில் அவர் குறித்து காந்தியிடம் விளக்காமல்  அந்த அறையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற வினாவை வ.ரா போன்ற ஒருவரால் மட்டுமே எழுப்ப முடியும். 
இந்த புத்தகம் மூலமாக நமக்குக்  கிடைக்கும் பாரதியார் பன்முகப் பரிமாணம் கொண்டவர் . ஒவ்வொரு நாளும் அன்று வந்த செய்தித்தாள்களை தவறாமல் படித்து குறிப்பெடுத்து கட்டுரைகளுக்குத் தயாராகும் பத்திரிகையாளர், தேச விடுதலைக்காக வெளிப்படையாகவும் ரகசியமாகவும் செயலாற்றத் துடிக்கும் தேசபக்தர், இலக்கியத்தின் எல்லையற்ற சாத்தியங்களின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு கலைஞர்,   வேதாந்த விசாரம் செய்யும் தத்துவவாதி என ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம்  வாழ்க்கைகளை இந்த புத்தகம் நமக்கு  விரித்துக் காட்டுகிறது. 
வேதாந்தம் குறித்து பாரதிக்கும் பேராசிரியர் சுந்தர ராம ஐயருக்கும் இடையில் நிகழ்ந்த விவாதங்கள் மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் என்ற நாளிதழில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த விவாதம் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளதா என நண்பர்கள் சொல்லலாம். 
யோகம் குறித்து விவேகானந்தர் முன்வைத்த பார்வையின் குறைபாட்டை உணர்ந்த பாரதி பதஞ்சலி யோக சூத்திரத்தை தாமே மொழிபெயர்த்து விளக்கியிருக்கிறார். யோகத்தை விளக்குவதில் பாரதியின் இடம் என்ன என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை. 
புதுவையில் வாழ்ந்த சுதேசிகளில் அதிகம் படித்தவர் வ. வே. சு ஐயர். நன்றாக பேசக்கூடியவர்கள் அரவிந்தர் மற்றும் பாரதி, தீவிர நிலைப்பாட்டாளர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு பிற்காலத்தில் தண்டிக்கப்பட்ட நீலகண்டம் கிறித்துவராக மாறிய சுரேந்திரநாத் ஆர்யா என பாரதி என்ற பேராலயத்தை  வலம்வர புலனாகும் காட்சிகள். 
ஒரு வகையில் பாரதியின் இறப்புக்குக் காரணமானதாக கருதப்படும் அவருடைய கட்டற்ற அபின் பழக்கம் அவர் எட்டயபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே  ஏற்பட்டுவிட்டது என்பதை அறியும்போது ஒரு துன்பியல் நாடகத்தின் கதாநாயகனைப் போல பாரதி தெரிகிறார். 
நாடகத் தனமான பல்வேறு சம்பவங்கள் நூலெங்கும்  விரவியுள்ளன.  
நூலாசிரியர் வ.ரா புதுவையில் அரவிந்தரின்  ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். ஆங்கிலேய காவல்துறையின் நெருக்கடியால் புதுவையில் தங்கியிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின்  பணவரத்து வெகுவாக முடக்கப்பட்டு விடுகிறது. ஆசிரமத்தில்  காய்கறிகளோ அவற்றை வாங்கப் பணமோ இல்லை. இது அரவிந்தர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இருப்பதை வைத்து சமாளிக்குமாறு அரவிந்தர் உத்தரவிடுகிறார்.  அன்று மிளகாய்த்தூள் கலந்த சோறு தான் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. பரோடா சமஸ்தானத்தில் ஓராயிரம் ரூபாய் மாதச் சம்பளமாக  வாங்கிக் கொண்டிருந்த அரவிந்தர், பன்னிரு மொழிகளில் புலமை மிக்கவர் என்று ஹைகோர்ட் நீதிபதிகளால் புகழப்பெற்ற அரவிந்தர் மிளகாய்த்தூள் கலந்த சோற்றைத்தான்  உட்கொள்ள வேண்டியிருக்கிறது. . 
இடது கால் பாதத்தில் ஏதோ காயம் ஏற்பட்ட்டுவிட்டதன் விளைவாகப் பொதுவாக இடது காலை ஊன்றுவதில் சிரமப்படும் பாரதியை இந்த நூல் நமக்குக்  காட்டுகிறது. இந்தியாவை நவீனப்படுத்தும் பெரும் கனவுகளைக்கொண்ட  ஒருவரின் வாழ்வை ஆற்றொழுக்கான மொழியில் விளக்கும் புத்தகத்தை வாசிப்பது ஓர் அலாதியான அனுபவம். 
இன்று தமிழகத்தின் முதன்மையான அனைத்து கருத்தியல்  தரப்புகளும் பாரதி என்ற அப்பத்தைப்   பங்கிட்டுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை . ஆனால் இந்த பாரதியுடன் இன்னொரு பாரதியும்  புத்தகம் மூலமாகத் தெரியத் தொடங்குகிறார். 
பாரதி புதுவையிலிருந்த போது ஒரு கதாகாலட்சேப நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நாளின் துரதிர்ஷ்டம் கதை சொல்ல வந்தவருக்கு சாமர்த்தியம் போதவில்லை. அல்லது அவர் கதை சொல்லும் நிகழ்ச்சியில் பாரதியும் வ.ராவும் கலந்து கொண்டது அவருக்குப்  போதாத காலம் என்றும் சொல்லலாம்.
 கதை சொல்பவர் மக்களின் கவனத்தை தமது பக்கம் ஈர்க்கும் பொருட்டு  அவ்வப்போது கோபிகா ஜீவனஸ்மரணம் என்று   உரத்து முழங்க,, அவையோர்  மரபுப் படி கோவிந்தா கோவிந்தா என்கிறார்கள். . இந்த ஆசாரத்தை கதை சொல்லி கூட்டத்தை அமைதிபடுத்தும் ஒரு எளிய தந்திரமாய் பயன்படுத்தியது பாரதிக்குப்  பிடிக்கவில்லை. உடனே அவர் வ.ராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது மட்டுமில்லாமல் தம்முடைய நண்பர் பொன்னு முருகேசன் என்பவரின் வேலைக்காரனான கோவிந்தனைக் கூப்பிடுகிறார். பாரதி சொன்னபடி ஒவ்வொரு முறை கோவிந்தா கோவிந்தா என்ற பெயர் ஒலிக்கப்படும் போதும் கோவிந்தன் உள்ளே சென்று எதற்காக என்னைக் கூப்பிட்டீர்கள் என்று கேட்கிறான். கதை சொல்ல வந்தவரைத்  தவிர மற்ற எல்லோரும் சிரிக்கிறார்கள். இந்த பாரதியை நீங்கள் வ. ராவின் புத்தகம் மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும். 
வ. வே . சு ஐயரின் கப்பற்பயணம் பற்றி நாம் அறிவோம்.  அதுபோன்ற ஒரு பயணம் பாரதிக்கும் அமைந்ததை  இந்தப் புத்தகம் நமக்கு  விளக்குகிறது. 
வாழ்வை  அகம், புறம் என்று பிரிப்பது நமது மரபு. இந்தப் புத்தகம் பாரதியின் புற வாழ்வை அதிகம் விளக்குகிறது. அப்படியென்றால் அகவாழ்வு? செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் என்ற புத்தகம் விளக்குமா என்ன?   அறிந்தவர்கள் சொல்லலாம். 
பாரதி ஓர் புதிய யுகத்தின் விடிவெள்ளி. அவன் மூலமாக காலம் தன்னைத்தானே மறு வரையறைக்கு உட்படுத்திக் கொண்டது. பள்ளி கொண்டிருக்கும் அது ஒரு முறை புரண்டு கொண்டது. தமிழ் இலக்கியத்தில் அந்த நிகழ்வை பாரதி என்ற சொல்லாலும் குறிக்கலாம். இதோ எல்லா வகைகயிலும் வசதியாகயிருக்கும் ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன் .பட்டாசுச் சத்தம் காதில் கேட்கிறது .விடிந்தால் தீபாவளி. குழந்தைகள் உற்சாகத்தில் திளைக்கிறார்கள். காலம், இடம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்ட இந்த உடல் மற்றும் மனத்தின் துணை கொண்டு காலாதித மனிதர்களை பயின்றுகொண்டிருக்கிறேன். 
பாரதி என்பது ஓர் ஆன்மீகத் தகுதி! 
 என்று திருமிகு வ.ரா அவர்கள் எழுதியுள்ள மகாகவி பாரதியார் என்ற இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இன்னும் உறுதியாகச்சொல்வேன். 
 புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்