எனக்குப் பிடித்த கிழக்கு டுடே

பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம்சுமார்  10 வருடங்களுக்கு முன்பு ஒலி நூல்களை நிறைய வெளியிட்டது.  மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகம். அதை திரு சால்ஸ் அவ்வளவு அழகாக வாசித்திருப்பார். மதனின் நடை சால்சின் குரல் இரண்டும் சேர்ந்து மொகலாயக் காலகட்டத்திற்கே  நம்மை கூட்டிச்செல்லும்..  என் அப்பா சிலாகித்த புத்தகம் அது. . எனக்கும் என்னைப் போன்ற மற்ற பார்வையற்ற நண்பர்களுக்கும் கேட்கக் கிடைத்தது.  திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த எழுத்தாளர் சா கந்தசாமி  அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. குப்பத்திலிருந்து சென்னை சென்றதும் தம்முடைய சிறுகதை ஒலிப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.  படிப்பது பரவசம், கேட்ப்பது அதைவிட ! என்ற வாசகம் ஒவ்வொரு ஒலிப் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கும்.  இப்படி தனது ஒலிப்புத்தகங்கள் வாயிலாக கிழக்கு பதிப்பகம் அந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்தது.  
நிறைய பேர் ஒலிப்புத்தகங்களை சட்டவிரோதமாக பிரதியெடுத்து சுற்றுக்குவிட்ட  காரணத்தினால் தொடர்ந்து  இந்தமுயற்சி  கைவிடப்பட்டதாக நினைக்கிறேன். 
கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் கிழக்குடுடே என்ற பெயரில் இணைய இதழ் தற்போது  வெளிவருகிறது. ஒரு நூலின் அத்தியாயம் என ஒவ்வொரு நாளும் சில அத்தியாயங்கள் இந்த இதழில் தொடர்களாக வெளிவருகின்றன. 
தற்போது ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, குப்தர் வரலாறு, சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்கள் என ஒவ்வொரு நாளும் கிழக்கு டுடே வெளிவருகிறது. 
இந்த இதழில் தமிழக சிற்பங்கள் குறித்து பத்ரி சேஷாத்திரி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். சிற்பங்களை அறிமுக நிலையில் அணுக நமக்கு மிகவும் உறுதுணையாக அமையும்  தொடர் இது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு, புகழ்பெற்ற இந்திய ஓவியக் கலைஞர்கள் என இலக்கியம் தவிர்த்த ஆனால் ஓர் இலக்கிய ஆர்வலன் தவிர்க்கவே முடியாத  பொருண்மைகளில் கிழக்கு டுடே  வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியாகயிருக்கிறது. 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்