பவபூதியும் இரா முருகனும்

தீ நம் ஸ்ரீ கண்டய்யா என்ற பேராசிரியர் கன்னட மொழியில் பாரதிய காவிய மீமாம்சே  ( இந்தியக் கவிதையியல்) என்ற நூல் இயற்றியிருக்கிறார். இந்த நூல் பற்றி  விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது பவபூதி பற்றி மட்டும். அதிலும் அவர் எழுதிய ஒரேயொரு கவிதை பற்றி மட்டும். 
உத்தர ராம சரிதத்திலிருந்து இந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யா அவர்களால் தரப்படுகிறது. 
சீதையை ஐயுற்றுக் காட்டுக்கு அனுப்பி விட்டு நெடுங்காலம் கழித்து இராமன் காட்டுக்கு வருகிறான்.  இராமனும் சீதையும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்திருந்த வாசந்தி என்ற வனதேவதை காட்டில் இராமனைப் பார்த்து  கோபத்தில் இப்படிச் சொல்கிறாள்.  
நீயே உயிர், 
இன்னொரு இதயம், 
கண்களுக்கு வெண்ணிலவு,
உடலின் அமுதம்! 
என்று பேசி
மேலும் சொல்லி என்? 
என்றபடி வாஸந்தி மயங்கி விழுந்துவிடுகிறாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தமசா என்ற நதி தேவதை இராமனை வாசந்தி பார்த்ததும் ,கேட்டதும் மயங்கிவிழுந்ததும்கூட  சரியான தருணத்தில் நிகழ்ந்ததல்லவா என்கிறாள். 
வாசந்தி மயங்கி விழுவது அவளுக்கு இராமன் மேல் எவ்வளவு கோபமும் சீதை மீது எவ்வளவு நேசமும் இருக்கிறது என்பதற்குச் சான்று. இப்படி ஒரு நாடகத் தருணத்தை அமைத்தது பவபூதியின் வெற்றி.  ஆனால் அத்துடன் அவர் அமையவில்லை. தான் அமைத்த உன்னதத் தருணத்தை எங்கே படிப்பவர்கள் தவற விட்டு விடுவார்களோ என்ற சிறு ஐயத்தின் காரணமாக தமசாவை பேச வைத்திருக்கிறார். பவ பூதியின் இத்தகைய செயல்பாடு அவருடைய கவிதையில் உள்ள த்வனியைக் கீழிறக்கி அதனை குணிபூதவ்யங்கியா என்ற இன்னொரு பகுப்பில் சேர்த்து விடுகிறது. அதாவது முதன்மைக் குறிப்பை முதன்மையற்ற குறிப்பாக மாற்றி விடுகிறது. 
இப்படி ஒரு தருணம் இரா முருகனின் அரசூர் வம்சம் நாவலிலும் வருகிறது. கதை நிகழும் காலத்தை 1800  முதல் 1850க்கு இடைப்பட்ட காலம் என்று கொள்ளலாம்
கேரளத்திலுள்ள அம்பலப்புரை என்ற ஊரில் ஓர் ஸ்மார்த்த பிராமணக்  குடும்பம் வாழ்ந்து வருகிறது.  மூன்று சகோதரர்களுக்கும் சமையல் தான் தோழில். அதனை அவர்கள் தேகண்டம்  என்கிறார்கள்.   
குப்புசாமி, துரைசாமி, கிட்டாவு ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று திருமணம் முதலியவற்றுக்கு  சமையல் செய்து கொடுத்து  சம்பாதிக்கிறார்கள். 
வெகுநாட்கள் வெளியில் இருந்து விட்டு குப்புசாமி ஊர் திரும்புகிறான். வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே சென்று கிணற்றடியில் முகம் அலம்பிக் கொண்டு திரும்பி வரும்போது  வெளியில் சென்றவர்கள் எல்லோரும் வந்து விடுகிறார்கள். 
பக்கத்து வீட்டு விசேஷம் என்பதால் அந்த வீட்டுக்குச்  சாப்பிடச் சென்றிருக்கிறார்கள். 
வீட்டில் சமைக்கவில்லையா? என்று குப்புசாமி கேட்டதற்கு உடனே சமைத்து விடுவதாகச்சொல்லி சமையலறையில் நுழைபவள் சினேகாம்பாள். சினேகாம்பாள் கிட்டாவு  ஐயரின் மனைவி. அவளுடைய குழந்தைகள் காமாட்சி பொறுப்பில். காமாட்சி துரைசாமி ஐயரின் மனைவி. வீட்டில் அப்போது இருக்கும்  சகோதரனும் சமையல் பாத்திரங்களை சரி செய்வதாகச் சொல்லி வெளியில் கிளம்பி விடுகிறான். வீட்டில் இருக்கும் மற்ற இரண்டு பெண்களும் சினேகாம்பாளுக்கு உதவி செய்ய சமையலறைக்குள் செல்கிறார்கள். இவ்வளவும் எதற்காக?  ரொம்ப நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கும் குப்புசாமியும் அவனுடைய மனைவி விசாலாட்சியும் கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் அதற்காகத்தான். 
இதை வாசகர்களாகிய நாம் கவனித்திருக்க வேண்டும். ஆனால் எங்கே நாம் கவனிக்காமல் போய்விடுவோமோ என்ற கவலை எழுத்தாளர் இரா .முருகனுக்கு. எனவேதான் அவர் கதை சொல்லியின் மூலம் இதனை விளக்க முயல்கிறார். 
உத்தர ராம சரிதத்தில் வாசந்தி மயங்கி விழுந்ததைப்  பற்றி தமசா என்ற நதி தேவதை கருத்து சொன்னது போலத்தான்  அரசூர் வம்சம் நாவலில் வரும் கதை சொல்லியின் விளக்கமும். 
அது சரி, பவ பூதியும் இரா.முருகனும் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? 
காலம் எதுவாக இருந்தாலும், காவியம்/ நாவல் என  இலக்கிய வகை எதுவாக இருந்தாலும், வடமொழி /தமிழ் என மொழி எதுவாக இருந்தாலும் தாம் படைப்பில் முன் வைக்கும் நுண்ணிய  அம்சங்களை அறியும் உணர்வுத்திறன்(literary sensibility)  இலக்கிய வாசகர்களுக்கு உண்டா என்ற பதற்றம் படைப்பாளர்களுக்கு இருக்கிறது. அது நியாயம் தான், 
இப்படி படைப்பாளிகள் தவிக்காமலிருக்க  நாம் பண்பட்ட வாசகர்கள் தான் என்று அவர்களை நம்பவைக்க வேண்டும். அதற்கு நம்முடைய சஹிருதய மனம் மேலும் மேலும் விழிப்புக்கொண்டு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். 
இப்போது சொன்னால் பவபூதிக்குக் கேட்காது. ஆனால்,  இரா . முருகனுக்குக் கண்டிப்பாகக்  கேட்கும்.  
கவலை வேண்டாம் எழுத்தாளரே
நாங்கள் இருக்கிறோம் !! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்