என்னுடைய வாசிப்பு முறைகள்

நாம் எப்படி வாசிக்கிறோம்? என்பது குறித்து யோசித்திருக்கிறோமா, நான் பெரிதாக யோசித்திருக்கவில்லை. 
ஒரு கட்டுரையில் புனைவை கற்பனையால் விரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல எனக்குள் ஒரு வெளிச்சம். 
அதன் பிறகு புனைவை வாசிக்கும் போது கற்பனை செய்யப் பழகினேன். உதாரணமாக, நதியில் படகு மெல்ல அசைந்து சென்று கொண்டிருக்கிறது. படகின் அமர முனையில் ஒருவன் நின்றிருக்கிறான். காற்று அவன் கூந்தலை மெல்ல அசைக்கிறது. 
இப்படிப்பட்ட வரிகள் வெண்முரசில் வரும்போது நான் அவற்றை கற்பனை செய்து கொள்வேன். கம்பனையும் இப்படித்தான் வாசிக்கிறேன். எல்லா நேரத்திலும் அல்ல, எல்லா கவிதைகளையும் இப்படியே வாசிக்கிறேன் என்று திட்டவட்டமாக சொல்லவும் முடியாது. சில கவிதைகளில் சந்த இனிமை, சொல்லாட்சி, அழகிய அணிகள் இவை சிறப்பாக இருக்கும். அப்போது நான் அவற்றில் இயன்றவரை கரைந்து போக விரும்புவேன். விரும்புவேன் அல்லது விரும்புகிறேன் என்று சொல்ல முடியுமே தவிர அவ்வாறு செய்ய எல்லா  நேரத்திலும் முடிகிறது என்று சொல்ல முடிவதில்லை 
.  போரும் அமைதியும் நாவலின்முதல் பகுதி மட்டும்  வாசித்திருக்கிறேன்.  ஆடம்பரமான விருந்துகள் மட்டுமல்ல சிப்பாய்களால் வெடிவைத்துத் தகர்க்கப்படும் பாலத்தையும் கற்பனை செய்ய முடியும் ‌ .
இப்போதெல்லாம் ஒரு சிறுகதை என்பது ஏன் ஒரு நாவல் என்பது கூட என்னுள் சில நிகழ்வுகளாகத்  தங்கி விடுகின்றன ‌ இது எனது புனைவுக்கான அணுகுமுறை. 
அல் புனைவைப்  (Non Fiction) பொறுத்தவரை கருத்துகள்  அணுகக் கூடியவையாக இருந்தால் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வேன்‌ சில நேரங்களில் ஆசிரியரின் மொழி கடினமானதாக இருக்கும்‌. அவரின் நடை நமக்கு உவப்பானதாக இருக்காது‌. அப்போதெல்லாம் என்ன செய்வது? 
நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கருத்துகளை உள்வாங்குவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு வாக்கிய அமைப்பை கவனிக்கத் தொடங்குவேன். ஒரு வாக்கியம் எங்கே முற்றுப்பெறுகிறது என்பதை கவனித்தால் இயல்பாகவே அதன் கருத்து நமக்குள் பதியும் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்கிறேன். 
ஒரு முக்கியமான செய்தி. ஒரு செயலை எல்லா நேரத்திலும் நாம் மனம் ஒன்றிச் செய்கிறோம் என்று கூறிவிட முடியாது. பல நேரம் பழக்கத்தினால் செயல்களை மேற்கொள்கிறோம். வாசிப்பும்  இதற்கு விதிவிலக்கல்ல. 
நண்பர்கள் குறிப்பெடுத்து வைப்பதை பரிந்துரைக்கிறார்கள். நண்பர் ஸ்ரீனிவாஸ் தாம் கம்பராமாயணத்தை குறிப்பெடுத்து வாசிப்பதாக் கூறினார். அதுவும் நல்லதே. சென்னை கிறித்துவக் கல்லூரியில் குறிப்பெடுத்தலின் இன்றியமையாமையை பேராசிரியர் கு .அரசேந்திரன் அவர்கள் எங்களுக்கு விளக்கியிருக்கிறார். ஒரு பார்வையற்றவனாக எனக்கு அது சிரமம் என்பதால் நான் அதை இதுவரை அதிகமாகக் கைக்கொள்ளவில்லை.
குறிப்பெடுப்பது என்பது  நம் பழைய நிழற் படங்களை பார்ப்பது போல. சில மாதங்களுக்கு முன்பு கிருபை சத்யநாதனின் கமலா என்ற நாவலை  வாசித்தேன். என் மனப்பதிவுகளை முயன்று  குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நாவல் பற்றிய என் இறுதி மதிப்பீடு இவ்வளவுதான் என்று இப்போதைக்கு திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்றாலும் என்னுடைய அடுத்த வாசிப்பிற்கு இந்தக் குறிப்புகள் உதவலாம். 
இந்தக் கருத்துகளில் சில இம்பர்வாரி கலந்துரையாடலில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 
நான் பின்பற்றும் முறைகளே மிகச் சரியானவை என்று சொல்ல வரவில்லை.   இன்னும் ஒரு விஷயம். இவையெல்லாம் என்னுடைய  மகிழ்வின் பொருட்டு வாசிப்பது eading for pleasure என்ற பகுப்பில் அமையும் நூல்களுக்குரியவை. ஆய்வுக்  கட்டுரைகள், முனைவர்ப் ப ட்ட ஆய்வேடுகள் மீதான மதிப்புரைகள் இவற்றுக்கெல்லாம் குறிப்பெடுத்தே  ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. இவற்றை விடவும் சிறந்த வழிமுறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். 
உங்கள் வழிமுறைகள் என்ன?  நண்பர்களே எனக்குச் சொல்லுங்கள். நான் இன்னும் நன்றாக வாசிக்கவேண்டாமா? 

Comments

  1. சிறப்பான வாசிப்பு அனுபவம் ஐயா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்