யமுனாவின் பொற்கணங்கள்

நமது பல்கலைக்கழக தமிழ்த்துறை  சார்பில் ஒவ்வொரு வாரமும்  புதன் கிழமையன்று வாராந்தரக் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பேராசிரியர் தமிழவன் அவர்களின் கனவு. 
தொடக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடத்திவந்தோம். புதன்கிழமை வசதிப் பட்டதால் மாற்றிவிட்டோம். ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் எல்லோரும் கலந்துகொள்கிறோம். இதனை புதன் வட்டம் என்று அழைக்கிறோம். பேராசிரியர் தமிழவன் காலத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களின் மதியவேளைகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெற்று வந்தது. 
புதன் வட்டத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம், ஆய்வுக் கட்டுரைகளும் வாசிப்போம்.   தற்போது எங்களின்  புனைவுகளையும் பகிர்ந்து கொள்கிறோம். 
முற்றிலும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்துகிறார்கள். இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர்களின் மேடை வெளிப்பாடுகள் மேம்படுவதைக் காணமுடிகிறது. 
அக்டோபர் 18 புதன்கிழமையன்று எங்கள் மாணவி யமுனா பொ. வேல்சாமி எழுதிய "பொற்காலங்களும் இருண்ட காலங்களும் "என்ற கட்டுரைத் தொகுப்பை அறிமுகப்படுத்திப் பேசினார். யமுனா தொல்காப்பியத்தை அமைப்பியல் நோக்கில் ஆய்வு செய்கிறார்.யமுனாவின் நெறியாளர் நண்பர் த.விஷ்ணுகுமாரன் , பேராசிரியர் குளோரியா சுந்தரமதி அவர்களின் வழிகாட்டுதலில் புறநானூற்றை அமைப்பியல் நோக்கில் ஆய்வு செய்தவர். யமுனா திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கல்வி கற்றுள்ளார். பேராசிரியர்,நண்பர் க. ஜவகர் அவர்களின் தனிச்சொல்  என்ற அமைப்பின் முலமாக முன்னெடுக்கப்படும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுகிறார். 
நூலின் முதற்சில  கட்டுரைகளை அறிமுகப்படுத்தவே நேரம் சரியாக இருந்தது. பதற்றமின்றி ஆற்றொழுக்காக யமுனாவால் பேசமுடிகிறது.  உரையைத் தொடர்ந்து தீவிரமான விவாதம் நடைபெற்றது. நட்பின் தீங்கனி வெம்பிவிடாமல் கவனமாக விவாதிக்க எங்களால் முடிகிறது. சென்றவாரம் சுவைக் கொள்கை பற்றி எங்கள் மாணவி ஜெ காமாட்சி காயத்ரி கட்டுரை வாசித்தார். தமிழாசிரியர்கள் எதையுமே படிப்பதில்லை என்பவர்கள் கொஞ்சம் எங்களையும் திரும்பிப் பார்ப்பார்களாக!  
யமுனாவைத் தொடர்ந்து முனைவர்ப் பட்ட ஆம்வாளர், நண்பர் செந்தில்சிவக்குமார் பஷீரின் ஃபாத்துமாவின் ஆடு நாவல் பற்றி உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து பஷீருக்கும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் இடையேயுள்ள ஒப்புமைகள் பற்றி உரையாடினோம். யமுனாவுக்கும், செந்தில் சிவக்குமாருக்கும் நமது அன்பு. 
நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும் நல்லதொரு தருணம்இது! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்